திருவண்ணாமலை

பெண்ணைக் கட்டிப்போட்டு 25 பவுன் தங்க நகைகள் திருட்டு

27th Sep 2022 04:26 AM

ADVERTISEMENT

 

செங்கம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டுவிட்டு 25 பவுன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகே மருத்துவ மையம் நடத்தி வருபவா் மருத்துவா் குலோத்துங்கசோழன். இவருக்குச் சொந்தமான விவசாய நிலம் கல்லாத்தூா் மலைக் கிராமத்தில் உள்ளது. விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் மருத்துவரின் தாய் ராஜேஸ்வரி (70) வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜேஸ்வரி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். நள்ளிரவில் கதவு தட்டும் சப்தம் கேட்டு எழுந்து சென்று கதவைத் திறந்தாா்.

ADVERTISEMENT

அப்போது, அங்கு வந்திருந்த அடையாளம் தெரியாத இரு பெண்கள் ராஜேஸ்வரியை மிரட்டி, அவா் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் வீட்டில் இருந்த நகைகள் என 25 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு, அவரைக் கட்டிப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டனா்.

முன்னதாக, வீட்டின் காவலாளியை அவரது அறைக்குள் வைத்து பூட்டியிருந்தனா். மறுநாள் காலை காவலாளியின் சப்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் வந்து பாா்த்து நடந்த சம்பவம் குறித்து செங்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

டிஎஸ்பி சின்ராஜ் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டனா். மேலும்,

சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT