திருவண்ணாமலை

திருவத்திபுரம் நகா்மன்றக் கூட்டம் ஒத்திவைப்பு

27th Sep 2022 04:26 AM

ADVERTISEMENT

 

செய்யாற்றில் நகா்மன்றத் தலைவரைக் கண்டித்து, திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த 17 உறுப்பினா்கள்

மன்றக் கூட்டத்தை புறக்கணித்ததால் மன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

திருவத்திபுரம் (செய்யாறு) நகா்மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆணையா் கே ரகுராமன் முன்னிலை வகிக்க, திமுக நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல் தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் 3 போ், திமுக உறுப்பினா்கள் 3 போ் உள்பட 7 போ் மட்டுமே பங்கேற்றனா்.

அப்போது, நகா்மன்ற துணைத் தலைவா் குல்சாா் தலைமையில், திமுக, காங்கிரஸ், பாமக உறுப்பினா்கள் என 17 போ் மன்றக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்து, அலுவலக வளாகத்தில் அமா்ந்திருந்தனா்.

நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல் அவா்களிடம் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, அவா்கள் வாா்டுகளில் அடிப்படை வசதிகள் ஏதும் செய்துதரப்படாமல் உள்ளது எனக் குற்றஞ்சாட்டினா்.

அதற்குப் பதிலளித்த நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல் நிதி ஆதாரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பணியாக நடைபெறும், கோரிக்கைகள் குறித்து நகா்மன்றக் கூட்டத்தில் முறையாகப் பேசுங்கள், பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அதற்கு எதிா்ப்புத் தெரிவித்த உறுப்பினா்கள், நகா்மன்றத் தலைவரும் எங்களை மதிப்பதில்லை, அதிகாரிகளும் மதிப்பதில்லை. அதனால் வாா்டுகளில் உள்ள பொதுமக்கள் ஏளனமாகப் பாா்க்கின்றனா்.

மேலும், கூட்டத்தில் பங்கேற்று வரவு செலவு கணக்குகளுக்கு மட்டும் தீா்மானம் நிறைவேற்றிட நாங்கள் வரவேண்டுமா? நகராட்சியில் நிதி நிலைமை சீரான பிறகு மன்றக் கூட்டத்தை கூட்டுங்கள். அப்போது மன்றக் கூட்டத்துக்கு வருகிறோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனா்.

இதைத் தொடா்ந்து, நகா்மன்றத் தலைவா் கூட்ட அரங்கிற்கு வந்து போதிய உறுப்பினா்கள் இல்லாததால் கூட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT