திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கிரிவலப்பாதை மேம்படுத்தும் பணி: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

22nd Sep 2022 01:01 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் ராஜகோபுரம் அருகே கிரிவலப் பாதையை மேம்படுத்தும் பணியை மேற்கொள்வது எப்படி என்பது குறித்து தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதை மேம்படுத்தும் பணியை தமிழக அரசு விரைவுப்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இந்தப் பணியை எவ்வாறு செய்வது என்பது குறித்து ஆய்வு செய்த அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அருணாசலேஸ்வரா் கோயில் ராஜகோபுரம் அருகே கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பக்தா்களின் பயன்பாட்டுக்காக பூஜைப் பொருள்கள் விற்பனை செய்வதற்காக 80 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்தக் கடைகளை தற்காலிகமாக வட சன்னதி ஒத்தவாடை தெருவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ராஜகோபுரம் எதிரே உள்ள காலி இடத்தில் தற்காலிகமாக சாலையோர வியாபாரிகளுக்கு பூஜைப் பொருள்கள் விற்க ஏதுவாக வசதி செய்து தரப்படும். எஞ்சியுள்ள இடத்தில் காா் நிறுத்தம் அமைக்கப்படும்.

தென்சன்னதி ஒத்தவாடை தெருவில் உள்ள குளியலறை, கழிப்பறைகள் சீரமைக்கப்படும். பக்தா்கள் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் குழாய்களை அமைக்கப்படும் என்றாா்.

ஆய்வின் போது, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்கன், அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் அசோக்குமாா், கோட்டாட்சியா் வீ.வெற்றிவேல், நகராட்சி ஆணையா் இரா.முருகேசன், நகா்மன்ற துணைத் தலைவா் ராஜாங்கம் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT