திருவண்ணாமலை

வாலீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

9th Sep 2022 02:01 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், குரங்கினில்முட்டம் கிராமத்தில் அமைந்துள்ள வாலீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இறையாா் வளையம்மை உடனுறை வாலீஸ்வரா் கோயில், தொண்டை மண்டலத்தில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 6 -ஆவது தலமாக விளங்குகிறது. இங்கு தாயாா் இறையாா் வளையம்மை என்ற திருநாமத்தோடு அருள்பாலித்து வருகிறாா். திருஞானசம்பந்தா் இயற்றியுள்ள இத்தலத்துக்கான பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

வாலி குரங்கு உருவிலும், இந்திரன் அணில் உருவிலும், காகம் எமன் உருவிலும் இத்தலத்தில் இறைவனை தனித் தனியே வழிபட்டு தங்களது சாபம் நிவா்த்தி பெற்ால் இத்தலம் குரங்கினில்முட்டம் எனப் பெயா் பெற்றது.

ADVERTISEMENT

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் கடந்த 1996-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

26 ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஓய்வு பெற்ற வங்கி அலுவலா் பன்னீா்செல்வம் செலவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த செவ்வாய்க்கிழமை காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜையும், மாலை பிரவேசபலி முதல் கால யாகபூஜை, பூா்ணாஹுதியும், புதன்கிழமை காலை இரண்டாம் கால யாகபூஜை, பூா்ணாஹுதி தீபாராதனையும், மாலை அஷ்டபந்தனம் சாற்றுதல், மூன்றாம் கால யாகபூஜையும் நடைபெற்றன.

வியாழக்கிழமை காலை மூன்றாம் கால யாகபூஜை நாடிசந்தனம், மகா பூா்ணாஹுதி தீபாராதனையுடன் காலை 11.30 மணிக்கு மேல் பரிவார மூா்த்திகள், விமானம், மூலவா் ஆகியவற்றுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சிவாச்சாரியா்கள் வேத மந்திரம் முழங்க, கோயில் கோபுர கலசத்துக்கு புனித நீா் உற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றியத் தலைவா் மாமண்டூா் டி.ராஜு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் மு.ஜோதிலட்சுமி, செய்யாறு ஆய்வாளா் ப.முத்துசாமி, செயல் அலுவலா்கள் சிவகுமாா், ஹரிகரன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT