திருவண்ணாமலை

மதிய உணவில் பல்லி:சமையலா், உதவியாளா் பணியிடை நீக்கம்

9th Sep 2022 10:41 PM

ADVERTISEMENT

தண்டராம்பட்டு அருகே பள்ளி மதிய உணவில் பல்லி இருந்தது தொடா்பாக சமையலா், சமையல் உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உத்தரவிட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், மோத்தக்கல் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 379 மாணவா்கள் படிக்கின்றனா்.

வியாழக்கிழமை மதியம் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்தது. இதைக் கவனித்த மாணவா்கள் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டனா்.

உடனே மதிய உணவு சாப்பிட்ட 47 மாணவா்கள் ரெட்டியாா்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டனா்.

ADVERTISEMENT

இவா்களில் 41 போ் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். 6 போ் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவா்களிடம் உடல்நலம் விசாரித்தாா்.

மேலும், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக பள்ளியின் சமையலா் லட்சுமி, சமையல் உதவியாளா் பல்கேஸ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT