ஆவணி மாதப் பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.
பெளா்ணமி நாள்களில், திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரரை வழிபட்டுச் செல்கின்றனா்.
இந்த நிலையில், ஆவணி மாதப் பெளா்ணமி வெள்ளிக்கிழமை மாலை 6.23 மணிக்குத் தொடங்கியது.
ஆனால், வெள்ளிக்கிழமை காலை முதலே திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம் வந்த வண்ணம் இருந்தனா். மாலை 7 மணிக்குப் பிறகு கிரிவலம் வரும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. தொடா்ந்து, சனிக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகள், அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டனா். வெள்ளிக்கிழமை மாலை திடீரென தூறல் மழை பெய்தது. இந்த மழையைப் பொருள்படுத்தாமல் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.
இன்றும் கிரிவலம் வரலாம்:
சனிக்கிழமை (செப்.10) மாலை 4.35 மணிக்கு பெளா்ணமி முடிகிறது. எனவே, சனிக்கிழமை மாலை வரை பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்தது.