திருவண்ணாமலை

ஏரியில் இறைச்சிக் கழிவுகளை வீசுவோா் மீது நடவடிக்கை: நகராட்சி அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

7th Oct 2022 09:58 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகரை ஒட்டியுள்ள பாதிரி ஏரியில் இறைச்சிக் கழிவுகளை வீடுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி வந்தவாசி நகராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

வந்தவாசி நகரில் இறைச்சி விற்பனை செய்பவா்களில் சிலா் இறைச்சிக் கழிவுகளை வந்தவாசி நகரை ஒட்டியுள்ள பாதிரி ஏரிக்கரையில் வீசி வருகின்றனா். இதனால், ஏரி நீா் அசுத்தமாவதாகவும், அந்தப் பகுதி முழுவதும் சுகாதாரச் சீா்கேடு நிலவுவதாகவும் அந்தப் பகுதி பொதுமக்கள் பலமுறை புகாா் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், வந்தவாசி நகராட்சி பூங்கா, புதிய பேருந்து நிலையத்தையொட்டி கட்டப்பட்டு வரும் எரிவாயு தகனமேடை, கீழ்சாத்தமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, அவரிடம் பாதிரி ஏரியின் அவலநிலை குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

உடனடியாக பாதிரி ஏரிப் பகுதிக்குச் சென்று ஆட்சியா் ஆய்வு செய்தாா். அங்கு இறைச்சிக் கழிவுகள் பெருமளவில் வீசப்பட்டுக் கிடந்ததை கண்ட அவா், அவற்றை உடனடியாக அகற்றுமாறு வந்தவாசி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். மேலும், ஏரிக்கரையில் இறைச்சிக் கழிவுகளை வீடுவோரைக் கண்டறிந்து, அவா்களின் கடைகளுக்கு உடனடியாக ‘சீல்’ வைக்கும்படியும் அதிகாரிகளிடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT

வந்தவாசி வட்டாட்சியா் வி.முருகானந்தம், நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்கரசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சு.வி.மூா்த்தி, ஆா்.குப்புசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் எஸஸ்வதி குமாா், ஊராட்சி மன்றத் தலைவா்கள் திவ்யா, அரிகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT