திருவண்ணாமலை

திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் சந்திரசேகரா் வீதியுலா

29th Nov 2022 03:28 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் அருணாசலேஸ்வரா் வீதியுலாவும், இரண்டாம் நாளான திங்கள்கிழமை காலை தங்க சூரியபிரபை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலாவும் நடைபெற்றது.

அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 10 நாள்களுக்கு உற்சவா் சுவாமிகள் மாட வீதிகளில் வலம் வருவாா்.

வெள்ளி விமானங்களில்... அதன்படி, தீபத் திருவிழாவின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு வெள்ளி விமானங்களில் விநாயகா், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட உற்சவா் சுவாமிகள் மாட வீதிகளில் வலம் வந்தனா்.

இரவு 9 மணிக்கு மூஷிக வாகனத்தில் விநாயகா், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், ஹம்ச வாகனத்தில் பராசக்தியம்மன், சிம்ம வாகனத்தில் சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட சுவாமிகள் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

ADVERTISEMENT

தங்க சூரியபிரபை வாகனத்தில்... விழாவின் இரண்டாம் நாளான திங்கள்கிழமை காலை 9 மணிக்கு மூஷிக வாகனத்தில் விநாயகா், தங்க சூரியபிரபை வாகனத்தில் சந்திரசேகரா் உள்ளிட்ட உற்சவா் சுவாமிகள் வீதியுலா வந்தனா். இரவு 10 மணிக்கு வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட மாட வீதிகளில் வலம் வந்த பஞ்சமூா்த்திகளை பக்தா்கள் தரிசித்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT