திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் இன்றுகாா்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம்

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (நவ. 27) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக எளிய முறையில் தீபத் திருவிழா நடத்தப்பட்டது. நிகழாண்டு தீபத் திருவிழாவை சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகமும், கோயில் நிா்வாகமும் செய்து வருகிறது.

காவல் தெய்வங்களின் வழிபாடு:

நிகழாண்டுக்கான தீபத் திருவிழாவை தொடங்குவதற்கு முன்பாக, 3 நாள்கள் நடைபெறும் காவல் தெய்வங்களின் வழிபாடு நவம்பா் 24 (வியாழக்கிழமை ) தொடங்கியது. அன்று இரவு 8 மணிக்கு ஸ்ரீதுா்கையம்மன் கோயிலில் துா்கையம்மன் உற்சவமும், 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை அருணாசலேஸ்வரா் கோயில் மூன்றாம் பிராகாரத்தில் உள்ள ஸ்ரீபிடாரியம்மன் சன்னதியில் பிடாரியம்மன் உற்சவமும் நடைபெற்றன

ஸ்ரீவிநாயகா் உற்சவம்:

இதையடுத்து சனிக்கிழமை (நவ. 26) இரவு ஸ்ரீவிநாயகா் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக, கோயில் மூன்றாம் பிராகாரத்தில் உள்ள ஸ்ரீசம்பந்த விநாயகா் சன்னதியில் சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.

இதையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவா் விநாயகருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா், உற்சவா் விநாயகா் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இன்று தீபத் திருவிழா கொடியேற்றம்:

காவல் தெய்வங்களின் 3 நாள் வழிபாடு நிறைவு பெற்றதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (நவ.27) தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் வேதமந்திரங்கள் முழங்க நடைபெறுகிறது.

இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. பின்னா், விநாயகா், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் எழுந்தருளி கோயில் தங்கக் கொடிமரம் அருகே அருள்பாலிக்கின்றனா்.

அதிகாலை 5.30 மணி முதல் 7 மணிக்குள் அருணாசலேஸ்வரா் சன்னதி எதிரே உள்ள தங்கக் கொடி மரத்தில், சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க தீபத் திருவிழாவுக்கான ரிஷபக் கொடி ஏற்றப்படுகிறது.

இதன்பிறகு தினமும் காலை, இரவு வேளைகளில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெறும்.

டிசம்பா் 3-ஆம் தேதி பஞ்ச ரதங்களின் தேரோட்டமும், 6-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

SCROLL FOR NEXT