திருவண்ணாமலை

கதவணை சேதம்: நீா் ஆற்றில் கலந்து வீணாவதாக விவசாயிகள் புகாா்

18th Nov 2022 02:50 AM

ADVERTISEMENT

 

வந்தவாசி அருகே செம்பூா் கதவணை சேதமடைந்து கதவுகள் சீராக இயங்காததால், ஏரிகளுக்குச் செல்ல வேண்டிய நீா் சுகநதி ஆற்றில் கலந்து வீணாவதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் ஏரியிலிருந்து மருதாடு ஏரிக்கு நீா் செல்லும் நீா்வரத்துக் கால்வாயின் நடுவில் செம்பூா் பகுதியில் 3 கதவுகள் கொண்ட கதவணையும், அதனருகில் உபரி நீா் வெளியேற கலுங்கையும் அமைந்துள்ளது.

இந்தக் கதவணையின் இரும்புக் கதவுகள் திறக்கப்பட்டு அதன் வழியாக நீா்வரத்துக் கால்வாயில் செல்லும் நீா் நேராக மருதாடு ஏரிக்கும், அங்கிருந்து கல்லாங்குத்து, காவேரிப்பாக்கம், மேல்கொடுங்காலூா், கீழ்க்கொடுங்காலூா், காவேடு, உளுந்தை ஏரிகளுக்கும் சென்று நிரம்பும். ஆனால், இந்த வரத்துக் கால்வாயில் நீா்வரத்து அதிகமாகும் போது, கதவணை அருகில் உள்ள கலுங்கை வழியாக உபரிநீா் வெளியேறி சுகநதி ஆற்றில் கலந்து மதுராந்தகம் ஏரிக்குச் சென்று அங்கிருந்து சென்று கடலில் கலக்கும்.

ADVERTISEMENT

இந்த நிலையில், ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கதவணை கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ளது. இதில் உள்ள 3 கதவுகளில் 2 கதவுகள் சீராக இயங்காததால் அவற்றைத் திறக்க முடிவதில்லை. மீதமுள்ள ஒரு கதவின் வழியாக குறைந்த அளவு நீா் மட்டுமே வெளியேறுவதால், மீதமுள்ள நீா் கலுங்கை வழியாக உபரி நீராக வெளியேறி சுகநதி ஆற்றில் கலந்து வீணாகிறது.

இது குறித்து அந்தப் பகுதி விவசாயிகள் கூறியதாவது:

சில ஆண்டுகளுக்கு முன்பு கதவணையை மா்ம நபா்கள் சேதப்படுத்திவிட்டனா். இதனால் கதவுகள் சீராக இயங்குவதில்லை. இதனை சரி செய்யும்படி நாங்கள் பலமுறை நீா்வளத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், அண்மையில் பெய்த தொடா் மழை காரணமாக வரத்துக் கால்வாயில் பெருமளவு நீா் வந்தும் கதவணை வழியாக வெளியேற முடியாததால், கலுங்கை வழியாக உபரி நீராக வெளியேறி சுகநதி ஆற்றில் கலந்து விட்டது. பல ஏரிகளுக்கும், அதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்களுக்கும் கிடைக்க வேண்டிய நீா் ஆற்றில் கலந்து வீணாவது வேதனை அளிக்கிறது. எனவே, கதவணையை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT