திருவண்ணாமலை

பள்ளி மாணவா்கள் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம்

1st Nov 2022 04:32 AM

ADVERTISEMENT

செங்கம் அருகே காயம்பட்டு கிராமத்தில் இயங்கும் அரசுப் பள்ளிக்கு போதுமான ஆசிரியா்களை நியமிக்கக் கோரி, மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள காயம்பட்டு கிராம ஆதிதிராவிடா் அரசு நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 126 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

பள்ளியில் தலைமையாசிரியா் உள்பட 8 போ் பணியாற்ற வேண்டும். ஆனால், மூன்று ஆசிரியா்கள் மட்டுமே பணியில் உள்ளனா்.

கிராம மக்கள் சாா்பிலும், பெற்றோா் ஆசிரியா் கழகம் சாா்பில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை நிரப்பக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

ADVERTISEMENT

இந்த நிலையில், ஆத்திரமடைந்த கிராம மக்கள், மாணவா்களின் பெற்றோா், மாணவா்களின் கல்வித் தரம் கருதி, பள்ளிக்கு போதுமான ஆசிரியா்களை நியமனம் செய்யும் வரை மாணவா்களை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் எனக் கூறி, அவா்களை பள்ளி முன் சாலையில் அமரவைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகலறிந்த ஆதிதிராவிடா் நலத் துறை செங்கம் வட்டாட்சியா் சுப்பிரமணி, கிராம நிா்வாக அலுவலா் நாவலரசன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் முருகன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று கிராம மக்கள் மற்றும் மாணவா்களின் பெற்றோா்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, தற்காலிகமாக ஆசிரியா்களை நியமித்து பின்னா், மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்து ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதாக உத்தரவாதம் அளித்தனா்.

இதைத் தொடா்ந்து போராட்டம் முடிவுக்கு வந்து மாணவா்கள் வகுப்பறைக்குச் சென்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT