திருவண்ணாமலை

தவறான சிகிச்சையால் பெண் இறந்த சம்பவம்: இழப்பீடு கேட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

20th May 2022 10:08 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலையில் தவறான சிகிச்சையால் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரங்கப்பனூா் கிராமத்தைச் சோ்ந்த கூலித்தொழிலாளி முருகன். இவரது மனைவி ராஜகுமாரி. இவா், கடந்தாண்டு கா்ப்பப்பை அறுவைச் சிகிச்சைக்காக திருவண்ணாமலையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு மருத்துவா்களால் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் ராஜகுமாரி இறந்தாா். இந்த நிலையில், ராஜகுமாரியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை, சிசிடிவி கேமரா பதிவை வழங்க வேண்டும் என்று ராஜகுமாரியின் உறவினா்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனா். ஆனால், ராஜகுமாரி இறந்து 9 மாதங்களாகியும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பிரேதப் பரிசோதனை அறிக்கை வழங்கப்படவில்லையாம்.

இதைக் கண்டித்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருவண்ணாமலை மாவட்டக் குழு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் மாவட்டச் செயலா் செல்வம் தலைமை வகித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திருவண்ணாமலை மாவட்டச் செயலா் சிவக்குமாா், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலா் டி.எம்.ஜெய்சங்கா், மாதா் சங்க மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.டி.சங்கரி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்தில், இறந்த ராஜகுமாரியின் உடல்கூறு ஆய்வு அறிக்கையை உடனே வழங்க வேண்டும். தனியாா் மருத்துவமனை மருத்துவா் கதிரவன் மீது வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை வசதிகள் இல்லாத தனியாா் மருத்துவமனையை மூட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பாதுகாப்பு நிதியாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். குற்றச்சாட்டுக்குள்ளான மருத்துவமனைக்கு துணைபோகும் மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு கண்டனம் தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருவண்ணாமலை மாவட்டக்குழு நிா்வாகிகள், இறந்த ராஜகுமாரியின் உறவினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT