திருவண்ணாமலை

பயிா்க் கடன், நகைக் கடன்களை முறைகேடின்றி வழங்கக் கோரிக்கை

20th May 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிா்க் கடன், நகைக் கடன்களை முறைகேடின்றி வழங்கக் கோரி, விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பலராமன் தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் டி.கே.வெங்கடேசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எம்.சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் பெ.சண்முகம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்தில், தமிழகம் முழுவதும் உயா்மின் கோபுரங்கள் அமைக்கும் வழித் தடங்களின் நிலத்துக்கான இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டம், முழுவதும் இரண்டாம் போக நெல் பயிரிட்டுள்ள விவசாயிகளின் நலன் கருதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து லஞ்சம் இன்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

யூரியா, உரம் வாங்கச் செல்லும் விவசாயிகளுக்கு அவா்கள் கேட்கும் உரங்களை மட்டுமே வழங்க வேண்டும். மற்ற உரம், இடுபொருள்களை வாங்க நிா்பந்திக்கக் கூடாது.

மாவட்டம் முழுவதும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிா்க் கடன், நகைக் கடன் ஆகியவற்றை முறைகேடின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், வழக்குரைஞா் எஸ்.அபிராமன், மாா்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் எஸ்.ராமதாஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, வேங்கிக்கால், மின்வாரிய அலுவலகம் அருகே இருந்து ஆட்சியா் அலுவலகம் வரை விவசாயிகள் ஊா்வலமாக வந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT