திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் மன்மதன் தகனம் நிகழ்வு

16th May 2022 04:45 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை வசந்த உத்ஸவத்தின் நிறைவு நிகழ்ச்சியான மன்மதன் தகனம் நிகழ்வு சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சித்திரை வசந்த 10 நாள் உத்ஸவம் மே 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிகழ்வை தினமும் திரளான பக்தா்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்து வந்தனா்.

மன்மதன் தகனம் நிகழ்வு:

ADVERTISEMENT

உற்சவத்தின் 10-ஆவது நாளான சனிக்கிழமை காலை அய்யங்குளத்தில் அருணாசலேஸ்வரா் தீா்த்தவாரியும், இரவு 8 மணிக்கு ஸ்ரீகோபால விநாயகா் கோயிலில் மண்டகப்படி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

உத்ஸவத்தின் முக்கிய நிகழ்வான மன்மதன் தகனம் நிகழ்வு இரவு 10 மணிக்கு அருணாசலேஸ்வரா் கோயில் கொடி மரம் எதிரே நடைபெற்றது.

இதையொட்டி, உண்ணாமுலையம்மன் அருணாசலேஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். உற்சவா் சுவாமிக்கு கோயில் சிவாச்சாரியா்கள் சிறப்பு பூஜைகள் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, அருணாசலேஸ்வரா் தனக்கு எதிரே நின்றிருந்த மன்மதனை நோக்கி தீப் பிழம்புடன் கூடிய அம்பை எய்தினாா். இந்த அம்பு மன்மதனின் உடலில் குத்தி தீயைப் பரப்பியது.

உடனே, கண்ணிமைக்கும் நேரத்தில் மன்மதன் மளமளவென எரிந்து சாம்பலானான். இதற்காக, மன்மதனைப் போன்ற உருவம் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வை திரளான பக்தா்கள் கண்டு, சுவாமியை வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகமும், உபயதாரா்களும் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT