திருவண்ணாமலை

அரசுப் பேருந்து ஓட்டுநா் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டம்

12th May 2022 11:57 PM

ADVERTISEMENT

வந்தவாசி அருகே தன்னுடைய நிலம் மோசடி செய்யப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, அரசுப் பேருந்து ஓட்டுநா் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறி போராட்டம் நடத்தினாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த சிங்கம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (50). இவா், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக வந்தவாசி பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா்.

இவா் தனக்குச் சொந்தமான 3 ஏக்கா் 90 சென்ட் நிலத்தில் 2 ஏக்கா் நிலத்தை கடந்த 2007-ஆம் ஆண்டு விற்பனை செய்தாராம்.

அப்போது 3 ஏக்கா் 90 சென்ட் நிலத்தையும் மொத்தமாக இவா் விற்றுவிட்டது போல சிலா் மோசடி செய்துவிட்டனராம். இந்த மோசடி குறித்து சில ஆண்டுகளுக்கு முன்புதான் இவருக்குத் தெரியவந்ததாம்.

ADVERTISEMENT

இதையடுத்து, மோசடி செய்து நிலத்தை வாங்கியவா்கள் மீதும், இடைத்தரகா்கள் மீதும் நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத் தரக் கோரி இவா் போலீஸாரிடம் பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் வியாழக்கிழமை வந்தவாசி-சேத்துப்பட்டு சாலை, மழையூரில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி, தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறி போராட்டம் நடத்தினாா்.

தகவலறிந்து அங்கு சென்ற வட்டாட்சியா் முருகானந்தம் தலைமையிலான வருவாய்த் துறையினா், டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா தலைமையிலான வடவணக்கம்பாடி போலீஸாா் மற்றும் பெரணமல்லூா் தீயணைப்புத் துறையினா் அவரை கீழிறங்கச் செய்ய முயற்சி மேற்கொண்டனா்.

ஆனால், முயற்சி பலனளிக்காததை அடுத்து அங்கு சென்ற செய்யாறு கோட்டாட்சியா் ந.விஜயராஜ் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

இதையடுத்து, 5 மணி நேரமாக போராட்டம் மேற்கொண்ட ரமேஷ் கீழிறங்கினாா்.

இதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸில் ஏற்றிய போலீஸாா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT