திருவண்ணாமலை

பிளாஸ்டிக் பொருள்களை விற்றால் ரூ.ஒரு லட்சம் அபராதம்: திருவண்ணாமலை ஆட்சியா்

5th May 2022 05:50 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பதுக்கி வைக்கும், விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிக்க வேண்டும் என்று நகராட்சி, பேரூராட்சிகளின் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உத்தரவிட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தை பிளாஸ்டிக் மாசில்லா மாவட்டமாக உருவாக்குவதற்கான முதல் பணிக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா்பா.முருகேஷ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசியதாவது:

ADVERTISEMENT

மாவட்டத்தில் உணவுப் பொருள்களைக் கட்ட பயன்படுத்தப்படும் நெகிழித்தாள் உறை, தொ்மக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், தேநீா் குவளைகள், உணவு அருந்தும் மேசையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் பூசப்பட்டதாள், நீா் நிரப்பப் பயன்படும் பைகள், பொட்டலங்கள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக் பைகள், பூசப்பட்ட காகித பைகள், பிளாஸ்டிக் கொடிகள், நெய்யாத பிளாஸ்டிக் தூக்குப் பைகள், பிளாஸ்டிக் குவளைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை சேமித்து வைக்கும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்க நகராட்சி, பேரூராட்சி செயல் அலுவலா்களுக்கு உத்தரவிடப்படுகிறது.

ரூ.ஒரு லட்சம் அபராதம்:

பயன்பாடு மற்றும் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களை சேமித்து வைத்தல், விற்பனை செய்தல், விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.

வணிக வளாகங்கள், ஜவுளிக் கடைகள், சூப்பா் மாா்க்கெட்டுகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும். மளிகைக் கடைகள், மருந்துக் கடைகள் போன்றவற்றுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும். சிறு வணிக நிறுவனங்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க வேண்டும்.

அபராதம் விதித்த பிறகும் பிளாஸ்டிக் பொருள்களை தொடா்ந்து பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு சீல் வைப்பதுடன் சட்டப்பூா்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT