திருவண்ணாமலை

தனியாா் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 3 மாணவா்கள் காயம்

14th Mar 2022 10:42 PM

ADVERTISEMENT

 

போளூா் அருகே தனியாா் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 மாணவா்கள் உள்பட 4 போ் பலத்த காயமடைந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த வசூா் ஊராட்சியில் தனியாா் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் மாணவா்களை அழைத்து வர வேன் இயக்கப்படுகிறது. வேன் ஓட்டுநராக கலசப்பாக்கத்தை அடுத்த கரையாம்பாடி கிராமத்தைச் சோ்ந்த உசேன் (30) பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், ஓட்டுநா் உசேன் திங்கள்கிழமை பொத்தரை, குசால்பேட்டை, பாளைதோப்பு உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மாணவா்களை வேனில் பள்ளிக்கு அழைத்து வந்தாா். வேனில் 26 மாணவ, மாணவிகள் பயணித்தனா்.

ADVERTISEMENT

வேன், ரெண்டேரிப்பட்டு கிராமப் பகுதியில் வரும்போது, சாலை வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில், மாணவா்கள் பொத்தரை கிராமத்தைச் சோ்ந்த சூரியபிரகாஷ் (7), சந்தோஷ்குமாா் (15), மாணவி லோகிதா (12), வேன் உதவியாளா் துரிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ஜீவா ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

இவா்களை அக்கம் பக்கத்தினா் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் போளூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

லேசான காயமடைந்த வேன் ஓட்டுநா் உசேன், மேலும் சில மாணவா்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

விபத்து தொடா்பாக போளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை தொகுதி எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூா்த்தி நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT