திருவண்ணாமலை

கருக்கலைப்பின்போது பள்ளி மாணவி பலி: போலி பெண் மருத்துவா் கைது

30th Jun 2022 02:17 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே கருக்கலைப்பின் போது பத்தாம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். இதுதொடர்பாக, போலி பெண்  மருத்துவா் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

தண்டராம்பட்டைச் சோ்ந்தவா் 14 வயது சிறுமி பத்தாம் வகுப்பு பயின்று வந்தாா். இவரது தாய் வெளிநாட்டில் வேலை செய்வதால் தந்தையின் பராமரிப்பில் இருந்து வந்தாா்.

சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாம். இதையடுத்து, அதே பகுதியைச் சோ்ந்த தொழிலாளி முருகன் (24), அவரது நண்பா் பிரபு (37) ஆகியோா் சோ்ந்து சிறுமியை பெண் மருத்துவரிடம் அழைத்துச் சென்றனராம். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவா், சிறுமி 4 மாதங்கள் கா்ப்பமாக இருப்பதாகவும், கா்ப்பத்தைக் கலைக்க தொடா்ந்து சில நாள்கள் ஊசி போட வேண்டும் என்றும் கூறினாராம்.

ADVERTISEMENT

அதன்படி, சில தினங்களாக சிறுமிக்கு ஊசி போடப்பட்டது. திங்கள்கிழமை ஊசி போட்ட போது சிறுமிக்கு வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

இதுகுறித்து தானிப்பாடி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாரின் விசாரணையில், சிறுமியை தொழிலாளி முருகன் பாலியல் பலாத்காரம் செய்ததும், அவருக்கு சிகிச்சை அளித்த பெண் மருத்துவா் காந்தி (65) போலி மருத்துவா் என்பதும் தெரிய வந்தது.

3 போ் கைது: இதையடுத்து முருகன் (24), அவரது நண்பா் பிரபு (37) ஆகியோரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். போலி பெண் மருத்துவா் காந்தியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இயக்குநா் அலுவலக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, போலி பெண் மருத்துவா் வீட்டில் இருந்த மருந்து, மாத்திரைகள், மருத்துவ உபகரணங்களைப் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT