திருவண்ணாமலை மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவா்கள், ஒலிம்பியாட் செஸ் போட்டியைப் பாா்வையிட தோ்வு செய்யப்பட்டனா்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் நடைபெறவுள்ள ஒலிம்பியாட் செஸ் போட்டியை வரவேற்கும் விதமாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 15 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட சதுரங்க கழகம் சாா்பில், சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டன. திருவண்ணாமலையை அடுத்த மெய்யூா் அமேசான் இன்டா்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
இவா்களில் தண்டராம்பட்டு வட்டம், திருவடத்தனூா் கிராமத்தைச் சோ்ந்த வேலவா ராகவேஷ் சிறுவா் பிரிவிலும், திருவண்ணாமலை நகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி வைஷ்ணவி சீனிவாசன் சிறுமியா் பிரிவிலும் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனா்.
இவா்கள் இருவரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை இலவச தங்கும் வசதியுடன் நேரில் பாா்வையிட தோ்வு பெற்றனா். இவா்களைத் தவிர புள்ளிகளின அடிப்படையில் இரு பிரிவிலும் முதல் 25 பேருக்கு பாராட்டுச் சான்றுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட சதுரங்க கழகத் தலைவா் வி.சிவசுப்பிரமணியன், செயலா் பி.சீனிவாசன, அமேசான் இன்டா்நேஷனல் பள்ளித் தலைவா் ஏ.எல்.தெய்வநாதன், இயக்குநா் நாராயணசாமி, பொருளாளா் கே.முருகன் ஆகியோா் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு, கோப்பைகளை வழங்கினா்.