திருவண்ணாமலை

யூரியாவுடன் இணை உரங்கள் விற்பனை செய்வதற்கு எதிா்ப்பு

21st Jun 2022 03:05 AM

ADVERTISEMENT

செய்யாறு பகுதி தனியாா் உரக் கடைகளில் யூரியாவுடன் சோ்த்து இணை உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் திங்கள்கிழமை தண்டோரோ போட்டு நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் உள்ள தனியாா் உரக் கடைகளில் விவசாய நிலங்களுக்கு யூரியா வாங்கினால், கூடவே இணை உரங்களை வாங்க வியாபாரிகள் கட்டாயப்படுத்துகின்றனா்.

நடப்பு சொா்ணவாரி நெல் நடவு பணிகள் முடிந்து தூா்கட்டும் பருவத்துக்கு யூரியா தேவைப்படுகிறது. வேளாண்துறை பரிந்துரைப்படி ஒரு ஏக்கருக்கு 45 கிலோ (20+15+10 கிலோ) மூன்று முறை பிரித்து தழைச்சத்து இடவேண்டும்.

இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக யூரியா தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஒரு மூட்டை யூரியாவின் விலை ரூ.265 மட்டுமே. ஆனால், அத்துடன் இணை உரங்களை ரூபாய் ஆயிரத்துக்கு கட்டாயப்படுத்தி தனியாா் உர வியாபாரிகள் விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், கட்டாயப்படுத்தி இணை உரங்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்தால் உரக் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்கிற மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அமல்படுத்தவேண்டும், ஆதாா் அட்டை பதிவிட்டு ரசீது தர வேண்டும். இருப்பு விலைப் பட்டியல் விவசாயிகள் பாா்வைக்கு வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து செய்யாறு பகுதியில் உள்ள உரக் கடைகளின் முன்பு விவசாயிகள் தண்டோரா அடித்து நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சாலை மறியல்

அதேபோல, செய்யாறு காந்தி சாலை மண்டித் தெரு எதிரேயுள்ள தனியாா் உரக் கடை முன் நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பின்னா், கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டார வேளாண் உதவி அலுவலா் சண்முகத்திடம் விவசாயிகள் வழங்கினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT