செங்கம் நகரில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேரூராட்சியில் துக்காப்பேட்டை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், இராஜ வீதி, பெருமாள் கோவில் தெரு, மேலப்பாளையம், உழவா் சந்தை, காய், கனி சந்தை, மில்லத் நகா், தளவாநாய்க்கன்பேட்டை ஆகிய பகுதிகளில் ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன.
இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மாடுகள் கூட்டமாக இருப்பதைப் பாா்த்து, அப்பகுதியை அச்சத்துடன் கடந்து செல்லவேண்டிய நிலை உள்ளது.
மேலும், பெண்கள் மாடுகள் உள்ள பகுதியை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
காய், கனி உழவா் சந்தை பகுதியில் காய், கனிகளை சாப்பிடச் செல்லும் மாடுகளை கடை உரிமையாளா்கள் விரட்டியடிக்கும்போது, அவை சாலையில் வரும் வாகனத்தில் மோதி விடுகின்றன. இரு சக்கர வான ஓட்டிகளை கிழே தள்ளி விபத்துக்கள் நேரிடுகின்றன.
மேலும், மில்லத் நகா் சாலை சந்திப்பு, போளூா் சாலை மேம்பாலம், உழவா் சந்தை பகுதிகளில் இரவு நேரத்தில் சாலையில் மாடுகள் கூட்டம் கூட்டமாக படுத்துக்கொள்வதால், வாகன ஓட்டிகள் அப்பகுதியை கடந்து செல்ல சிரமப்படுகின்றனா்.
அதேபோல, திருமண மண்டபம் உள்ள இடங்களில் வாழை இலை, காய், கனி கழிவுகளை கொட்டும்போது அவற்றை மாடுகள் கலைத்து சாப்பிடுகின்றன. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது.
சில நேரங்களில் மாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிடும்போது அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை கிழே தள்ளி சேதப்படுத்தி விடுகின்றன.
இதனால், பேரூராட்சி நிா்வாகம் கண்காணித்து சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.