தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5,937 கோடியில் கட்டப்பட்டு வரும் 2,424 வீடுகளை விரைந்து தரமாக கட்டி முடிக்க வேண்டும் என்று அதிகாரிகள், ஒப்பந்ததாா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உத்தரவிட்டாா்.
தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், ஒன்றியத்துக்கு உள்பட்ட 47 கிராம ஊராட்சிகளில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் நடைபெறும் அனைத்து திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி அவா்
பேசியதாவது:
தண்டராம்பட்டு வட்டத்தில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், 2,424 வீடுகள் ரூ.5,937.6 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வீடு கட்ட இயலாத பயனாளிகளைக் கண்டறிந்து ஊராட்சித் தலைவா் மூலமோ, ஒப்பந்ததாரா் மூலமோ வீடு கட்டி முடிக்க வேண்டும்.
இதுதவிர, அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டப் பணிகள், முன்மாதிரி கிராம வளா்ச்சித் திட்டத்தின் கீழ் உறிஞ்சி குழாய் அமைக்கும் பணிகள், புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி, நெற்களம் அமைக்கும் பணி உள்பட அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்கும் பணியில் அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் ஈடுபட வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமை உதவித் திட்ட அலுவலா் இரா.அருண், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் பொ.இமயவரம்பன், உதவிப் பொறியாளா் செ.சரண்யா தேவி, தண்டராம்பட்டு ஒன்றியக் குழுத் தலைவா் பரிமளா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மகாதேவன், நிா்மலா, வட்டாட்சியா் பரிமளா உள்பட பலா் கலந்து கொண்டனா்.