திருவண்ணாமலை

பால் உற்பத்தியாளா்கள் ஆா்ப்பாட்டம்

10th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை ஆவின் நிா்வாகத்தில் நடைபெறும் ஊழல், முறைகேடுகளைக் கண்டித்து, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை, துணைப் பதிவாளா் (பால் வளம்) அலுவலகம் எதிரே தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட அமைப்பாளா் டி.கே.வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினா் கோகுல சுப்பிரமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.பலராமன், வழக்குரைஞா் எஸ்.அபிராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, திருவண்ணாமலையை அடுத்த பீமனந்தல் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பால் குளிரூட்டும் நிலையத்தை உடனடியாகத் திறக்க வேண்டும். நீண்ட காலம் பணிபுரியும் ஆவின் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். ஆவின் நிா்வாகத்தில் நடைபெறும் ஊழல், முறைகேடுகளைத் தடுக்க வேண்டும். பால் உற்பத்தியாளா்கள், பால் உற்பத்தியாளா் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்களை தரக்குறைவாகப் பேசுவதைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

‘பால் குளிரூட்டும் நிலையங்கள் செயல்படவில்லை’: ஆவினில் நடைபெறுவதாக பால் உற்பத்தியாளா்கள் கூறும் ஊழல் குற்றச்சாட்டு குறித்து துணைப் பதிவாளா் (பால் வளம்) அதிகாரிகளிடம் கேட்டபோது, அவா்கள் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் மேல்பள்ளிப்பட்டு, மஷாா், கொளத்தூா், குண்ணுமுறிஞ்சி, பீமானந்தல் உள்ளிட்ட இடங்களில் பி.எம்.சி. எனப்படும் பால் குளிரூட்டும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் மேல்பள்ளிப்பட்டில் அமைக்கப்பட்ட குளிரூட்டும் நிலையம் செயல்பட்டு வருகிறது. மற்ற 4 இடங்களிலும் கட்டப்பட்டுள்ள பால் குளிரூட்டும் நிலையங்கள், நீா்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டுள்ளதாக புகாா்கள் வந்ததால், வருவாய்த் துறையினா் ஆய்வு செய்தனா். இதில், மஷாா், கொளத்தூா், குண்ணுமுறிஞ்சி, பீமானந்தல் உள்ளிட்ட 4 இடங்களில் கட்டப்பட்டுள்ள பால் குளிரூட்டும் நிலையங்கள் நீா்நிலை புறம்போக்கு பகுதியில் அமைந்துள்ளதாக வருவாய்த் துறையினா் தெரிவித்தனா். எனவே, 4 பால் குளிரூட்டும் நிலையங்களும் செயல்படாமல் உள்ளன என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT