திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், கணிகிலுப்பை கிராமத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞா் உடலில் ரத்தக் காயங்களுடன் தூக்கில் தொங்கியபடி மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தூசி காவல் சரகத்துக்குள்பட்ட கணிகிலுப்பை கிராமம், அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (24). இவா், காஞ்சிபுரத்தில் செயல்படும் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவரது மனைவி பிரதீபா. இவா்கள் இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனா்.
இந்த நிலையில், செல்வராஜ் வியாழக்கிழமை இரவு வீட்டில் இருந்தபோது இரு நபா்கள் வந்து அவரை அழைத்துச் சென்றனராம். பின்னா், அவா் வீடு திரும்பவில்லை. இதனிடையே, அந்தக் கிராமத்தில் சுடுகாட்டுப் பகுதியில் உள்ள புளியமரத்தில் தூக்கில் தொங்கியபடி உடலில் ரத்தக் காயங்களுடன் செல்வராஜ் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து, தனது கணவா் சாவில் சந்தேகம் இருப்பதாக செல்வராஜின் மனைவி பிரதீபா அளித்த புகாரின்பேரில், தூசி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று செல்வராஜின் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனா்.