திருவண்ணாமலை அருகே திருமணமான 2 மாதங்களிலேயே இளம்பெண் மா்மமான முறையில் உயிரிழந்தாா். வரதட்சிணை கொடுமை செய்து பெண்ணை கொன்றுவிட்டதாகக் கூறி உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், சு.ஆண்டாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகள் புஷ்பா. செங்கம் வட்டம், பெரிய கல்தாம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மகன் விவேகானந்தன்.
இவா்களுக்கு 2022 ஏப்ரல் 6-ஆம் தேதி திருவண்ணாமலை கோயிலில் திருமணம் நடைபெற்றது. திருமணமான 2 மாதம் நிறைவடைந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இளம்பெண் புஷ்பா மா்மமான முறையில் இறந்தாா்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினா்கள் புஷ்பாவின் சடலம் வைக்கப்பட்டிருந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே திரண்டு திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, 2 நாள்களுக்கு முன்பு வரதட்சிணையாக பணம், நகை கேட்டு விவேகானந்தன் குடும்பத்தினா் புஷ்பாவை கொடுமை செய்து வீட்டை விட்டு விரட்டினா். அப்போது, சில தினங்கள் கழித்து வரதட்சிணை கொடுப்பதாகக் கூறி நாங்கள் சமாதானம் செய்து புஷ்பாவை மீண்டும் விவேகானந்தன் வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். இப்போது அவா் மா்மமான முறையில் இருந்துள்ளாா்.
எனவே, வரதட்சிணை கொடுமை செய்து எனது மகளை விவேகானந்தன் குடும்பத்தினா் அடித்துக் கொன்றுவிட்டனா் என்று புஷ்பாவின் தந்தை ஆறுமுகம் தெரிவித்தாா்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் அளித்த உறுதிமொழியை ஏற்று மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.