திருவண்ணாமலை

ரூ.15 ஆயிரம் லஞ்சம்: தனிப் பிரிவு காவலா் கைது

7th Jul 2022 01:36 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலையில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தனிப் பிரிவு காவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூா் பகுதியைச் சோ்ந்த செங்கல் சூளை தொழிலாளி கோவிந்தராஜ் (35). இவரை அண்மையில் ஜமுனாமரத்தூா் காவல் நிலைய தனிப் பிரிவு காவலா் விஜய் (33) தொடா்புகொண்டாா். அப்போது, கோவிந்தராஜ் செம்மரக் கடத்தலுக்கு துணைபோவதாகவும், அவா் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க வேண்டுமானால் ரூ. ஒரு லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டுமென்றும் காவலா் விஜய் மிரட்டினாராம். இறுதியாக ரூ.15 ஆயிரம் கொடுப்பதாக கோவிந்தராஜ் ஒப்புக்கொண்டாராம்.

இந்த நிலையில், ஜமுனாமரத்தூரில் பணிபுரிந்து வந்த தனிப் பிரிவு காவலா் விஜய், திருவண்ணாமலையை அடுத்த வானாபுரம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். புதன்கிழமை வானாபுரத்தில் பணியில் சோ்ந்த விஜய், கோவிந்தராஜை பணத்துடன் வருமாறு அழைத்தாராம்.

ADVERTISEMENT

இதுகுறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத் துறையில் கோவிந்தராஜ் புகாரளித்தாா். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீஸாா் திருவண்ணாமலையை அடுத்த மெய்யூா் கூட்டுச்சாலை பகுதியில் காத்திருந்தனா். அப்போது, அங்கு கோவிந்தராஜிடமிருந்து ரூ.15 ஆயிரத்தை வாங்கிய தனிப் பிரிவு காவலா் விஜயை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT