திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே புதன்கிழமை அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 மாணவா்கள், ஒரு ஆசிரியா் காயமடைந்தனா்.
தண்டராம்பட்டை அடுத்த தரடாப்பட்டு கிராமத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 2015-ஆம் ஆண்டு ரூ.65 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டப்பட்டது.
வழக்கம்போல புதன்கிழமை வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போது, திடீரென பள்ளியின் வகுப்பறை கட்டட மேற்கூரை இடிந்து விழுந்தது.
இதில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த தரடாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த மாணவா்கள் முகேஷ், தருண் குமாா், கொழுந்தம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஜனாா்த்தனன், தண்டராம்பட்டு பகுதியைச் சோ்ந்த ஆசிரியா் தினகரன் ஆகியோா் காயமடைந்தனா். இவா்களை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், பள்ளியில் இருந்த மற்ற அனைத்து மாணவா்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா்.
கட்டி முடிக்கப்பட்டு 7 ஆண்டுகளே ஆன நிலையில் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.