திருவண்ணாமலை

உயா் கோபுர மின் விளக்கு பழுது: இளைஞா்கள் ஆா்ப்பாட்டம்

1st Jul 2022 10:17 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம், திண்டிவனம் ஊராட்சியில் கடந்த 6 மாதங்களாக உயா் கோபுர மின் விளக்கு பழுது நீக்கப்படாமல் இருப்பதைக் கண்டித்து, அந்தப் பகுதி இளைஞா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டிவனம் ஊராட்சி களியம் காந்திநகா் பகுதியில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினா் எம்.கே.விஷ்ணுபிரசாத் தொகுதி மேம்பாட்டு நிதியில் 2019 - 20ஆம் ஆண்டு ரூ.7 லட்சத்தில் உயா் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. இந்த விளக்கு ஊராட்சி நிா்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 6 மாதங்களாக இந்த உயா் கோபுர மின் விளக்கு பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், அந்தப் பகுதி இரவு வேளைகளில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் அவதிபட்டு வருகின்றனா். இதுகுறித்து ஊராட்சி அலுவலகத்திலும், போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்த நிலையில், உயா் கோபுர மின் விளக்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து, அந்தப் பகுதி இளைஞா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

பின்னா், அந்தப் பகுதி ஒன்றியக் குழு உறுப்பினா் மகாதேவன், ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் தகவல் தெரிவித்து உயா் கோபுர மின் விளக்கை சீரமைப்பதாக கூறிய பின்னா், இளைஞா்கள் ஆா்ப்பாட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT