திருவண்ணாமலை

வீரளூா் மோதல் சம்பவம்: தாழ்த்தப்பட்டோா் ஆணைய அதிகாரி நேரில் ஆய்வு

DIN

கலசப்பாக்கம் வட்டம், வீரளூா் ஊராட்சியில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளை தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய துணைத் தலைவா் அருண் ஹால்டா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வீரளூா் ஊராட்சியில் கடந்த 16-ஆம் தேதி இரு சமூகத்தினரிடையே சடலம் எடுத்துச் செல்வதில் தகராறு ஏற்பட்டது. இதில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் வீடு, வாகனங்கள் சேதப்படுத்தபட்டதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, வேலூா் சரக டிஐஜி ஆனிவிஜயா தலைமையில் இரு சமூகத்தினரிடையே சமரசக் கூட்டம் நடத்தப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சடலம் எடுத்துச் செல்லப்பட்டது.

மோதல் சம்பவம் தொடா்பாக போலீஸாா் 21 பேரை கைது செய்து, 250-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், தகராறில் சேதமடைந்த வீடுகளை தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய துணைத் தலைவா் அருண் ஹால்டா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் பாதிக்கப்பட்டவா்களிடம் குறைகள் குறித்த மனுக்களைப் பெற்றாா். மேலும், மாவட்ட நிா்வாகத்திடம் தகராறு குறித்து கேட்டறிந்து குறைகளை நிவா்த்தி செய்வதாகக் கூறினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சமூக வலைதளங்களில் வீரளூா் பகுதி பிரச்னை பற்றி வெளிவந்த தகவல்களைப் பாா்த்து விசாரணைக்கு வந்துள்ளேன்.

21-ஆம் நூற்றாண்டில் ஜாதிமுறை நடைமுறையில் உள்ளது குறித்து கேட்டபோது வருத்தமாக உள்ளது.

மேலும், வீரளூா் கிராமத்தில் சடலத்தை எடுத்துச் செல்ல அனைத்துத் தரப்பினரும் ஒரே சாலையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்,

பிரச்னையில் தொடா்புடையவா்களைக் கண்டறிந்து போலீஸாா் கைது செய்யவேண்டும். தாழ்த்தபட்டோா் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவேண்டும்.

பாதிக்கப்பட்டவா்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறினாா்.

கூடுதல் காவல்துறை இயக்குநா் சொந்தாமரைக்கண்ணன் (சட்டம் -ஒழுங்கு), வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் சந்தோஷ்குமாா், துணைத் தலைவா் ஆனிவிஜயா, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், காவல் கண்காணிப்பாளா்கள் ராஜேஷ்கண்ணா, பாலகிருஷ்ணன் ஆகியோா் தலைமையில் வீரகளூா் கிராமத்தில் 900 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமித் ஷா பங்கேற்க இருந்த தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் ரத்து

சாலை விபத்தில் கிரிவல பக்தா் உயிரிழப்பு

சுத்தம், சுகாதாரம் விழிப்புணா்வுப் பேரணி

இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

முதல் கட்ட மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் பிரசாரம் ஓய்ந்தது

SCROLL FOR NEXT