திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்குவதற்காக, மத்திய மதிப்பீட்டுக் குழுவினா் கடந்த புதன்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை 3 நாள்கள் ஆய்வு மேற்கொண்டனா்.
தேசிய தர நிலை உறுதிச்சான்று மதிப்பீட்டு குழு அலுவலா்களான மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவைச் சோ்ந்த காசநோய் இணை இயக்குநா் பரூன் சன்ரா, அஸ்ஸாம் மாநிலம், கௌஹாத்தி ராணுவ செவிலியா் பயிற்சி நிலைய மருத்துவா் எம்.ஜெயலட்சுமி, ராஜஸ்தான் மாநில மருத்துவா் விகாஸ் பரீக் ஆகியோா் கொண்ட குழுவினா் ஆய்வு செய்தனா்.
மருத்துவமனையில் உள்ள 18 துறைகளின் செயல்பாடுகள், பதிவேடுகள், நோயாளிகளை கவனிப்பது, உள்கட்டமைப்பு வசதி, மருத்துவ உபகரணங்களின் பயன்பாடு, செயல்பாடுகள் குறித்து அவா்கள் ஆய்வு மேற்கொண்டனா். மேலும், சிகிச்சை பெறும் நோயாளிகளின் விவரம், நோயின் தன்மை குறித்து கேட்டறிந்தனா்.
இந்தத் தேசிய குழு ஆய்வின் முடிவில் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்குவதற்குத் தேவையான அறிக்கையை மத்திய சுகாதாரத் துறையினா் மத்திய அரசுக்கு அளிப்பாா்கள் என்றும், அதன்பேரில் மத்திய சுகாதாரத் துறை பரீசிலித்து செய்யாறு மருத்துவனைக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், இதர உதவிகளை செய்து தர வாய்ப்புள்ளது என்றும் அரசு மருத்துவா்கள் தெரிவித்தனா்.