திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே கல்பட்டுகொல்லைமேடு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ.20 லட்சத்திலான ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கண்ணமங்கலம் காவல் நிலைய ஆய்வாளா் சாலமன் ராஜாவுக்கு கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் விஜயகுமாா் மற்றும் போலீஸாா் கொண்ட குழுவினா் கல்பட்டுகொல்லைமேடு பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, அங்கு ஆளில்லாத வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ.20 லட்சத்திலான ஒரு டன் செம்மரக் கட்டைகளையும், அதை கடத்துவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், இந்த செம்மரக் கட்டைகள் ஆந்திரத்திலிருந்து கடத்திவந்து இந்தப் பகுதியில் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததும், சென்னைக்கு கடத்தப்படவிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சந்தவாசல் வனச் சரகா் செந்தில்குமாரிடம் செம்மரக் கட்டைகளையும், வேனையும் போலீஸாா் ஒப்படைத்தனா்.