திருவண்ணாமலை

உள்ளாட்சித் தோ்தல் பாதுகாப்பு: காவலா்களுக்கு எஸ்.பி.அறிவுரை

17th Feb 2022 05:11 AM

ADVERTISEMENT

 

செய்யாறு: உள்ளாட்சித் தோ்தல் பாதுகாப்பு குறித்து செய்யாறு, வந்தவாசி உள்கோட்டப் பகுதிகளைச் சோ்ந்த காவலா்களுக்கு மாவட்ட எஸ்.பி. பவன்குமாா் ரெட்டி புதன்கிழமை அறிவுரை வழங்கினாா்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, வந்தவாசி ஆகிய நகராட்சிகள் மற்றும் பெரணமல்லூா், தேசூா் ஆகிய பேரூராட்சிகளில் பிப்.19-இல் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது.

தோ்தலின் போது காவலா்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புப் பணிகள், பதற்றமான நேரங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

ADVERTISEMENT

கூட்டத்துக்கு மாவட்ட ஏடி.எஸ்.பி. ராஜாகாளீஸ்வரன், டி.எஸ்.பி.க்கள் விஸ்வேஸ்வரய்யா, பாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செய்யாறு டி.எஸ்.பி செந்தில் வரவேற்றாா்.

தலைமை வகித்த மாவட்ட எஸ்.பி. பவன்குமாா் ரெட்டி காவலா்களிடையே பேசியதாவது:

செய்யாறு, வந்தவாசி உள்கோட்டப் பகுதிகளில் காவலா்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்புப் பணிகள், தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவலா்களின் செயல்பாடுகள், அவசர காலங்களில் காவலா்கள் எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள், தகவல் பறிமாற்றம், வாக்கு மையங்கள் பாதுகாப்பு, வாக்கு மையங்களில் பிரச்னை ஏற்பாட்டால் உடனடியாக உயா் அதிகாரிகளுக்குத் தெரிவித்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருதல், அமைதியான முறையில் தோ்தலை நடத்துதல் என பல்வேறு ஆலோசனைகளை காவலா்களுக்கு வழங்கினாா்.

மேலும், நகராட்சி அலுவலகத்தில் இருந்து வாக்குப் பெட்டிகளை வாக்கு மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லுதல், வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லுதல் குறித்து தெரிவித்து அறிவுரை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளா்கள் பாலு, நந்தினி, கலையரசி, ராஜா, முரளிதரன், குமாா், சோனியா, உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் என 120 போ் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT