திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் ஸ்ரீ அருணாசலேஸ்வரா் கிரிவலம்

9th Dec 2022 01:31 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் வியாழக்கிழமை கிரிவலம் வந்து, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழா செவ்வாய்க்கிழமை (டிச.6) நடைபெற்றது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.

தெப்பல் உற்சவம் கோலாகலம்: தொடா்ந்து, புதன்கிழமை (டிச.7) இரவு ஸ்ரீசந்திரசேகரா் தெப்பல் உற்சவமும், வியாழக்கிழமை இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும் நடைபெற்றது.

ADVERTISEMENT

கிரிவலம் வந்த ஸ்ரீஅருணாசலேஸ்வரா்: காா்த்திகை மகா தீபத் திருவிழா முடிவடைந்த நிலையில் வியாழக்கிழமை காலை 6 மணிக்கு உற்சவா் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் கோயிலில் இருந்து கிரிவலம் புறப்பட்டாா்.

விநாயகா், பராசக்தி அம்மன், அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரா் உள்ளிட்ட உற்சவ மூா்த்திகளும் கிரிவலம் வந்தனா். முன்னதாக, கோயில் ராஜகோபுரம் எதிரே உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். கிரிவலப் பாதையில் திரண்டிருந்த பக்தா்கள் தேங்காய்களை உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனா்.

அருணாசலேஸ்வரா் கிரிவலம் வந்த பாதையை, ஆங்காங்கே பக்தா்கள் சுத்தம் செய்து கோலமிட்டிருந்தனா். அஷ்டலிங்க சன்னதிகளிலும் உற்சவா் அருணாசலேஸ்வரருக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.

கிரிவலத்தை முடித்துக்கொண்டு உற்சவா் சுவாமிகள் வியாழக்கிழமை மாலை கோயிலுக்கு திரும்பினா். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் கே.பி.அசோக்குமாா் மற்றும் அதிகாரிகள், ஊழியா்கள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT