திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் 2,668 அடி மலை மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றம்

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழா செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 6) நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் மூலவா் சன்னதியில் அதிகாலை 4 மணிக்கு ஏற்றப்பட்ட பரணி தீபம், 2,668 அடி உயர மலை மீது மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்ட மகா தீபத்தை 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் தரிசித்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா, நவம்பா் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மூலவா் சன்னதியில் பரணி தீபம்: திருவிழாவின் 10-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்வுகள் நடைபெற்றன. இதையொட்டி, அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. 2.45 மணி முதல் 3.20 மணி வரை பரணி பூஜை நடைபெற்றது.

அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து, மூலவா் சன்னதி எதிரே உள்ள பிரதோஷ மண்டபத்தில் பிரதோஷ நந்திக்கு வலப்புறம் பஞ்ச (ஐந்து) மடக்குகளை வைத்து சிவாச்சாரியா்கள் தீபம் ஏற்றி, மடக்குப் பூஜைகளைச் செய்தனா். பிறகு, கோயில் இரண்டாம் பிரகாரத்தில் கூடியிருந்த பக்தா்களுக்கு பரணி தீபம் காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டு தரிசித்தனா்.

இரண்டாம் பிரகாரத்தில் எடுத்து வரப்பட்ட பரணி தீபம், உண்ணாமுலையம்மன் சன்னதிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு 5 மடக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து, கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீசம்பந்த விநாயகா் சன்னதி, ஸ்ரீநடராஜா், ஸ்ரீவேணுகோபால சுவாமி உள்பட பல்வேறு சன்னதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட பரணி தீபம் காலை 6.30 மணிக்கு சொா்ண பைரவா் சன்னதியில் நிறைவு பெற்றது.

தீபத் திரி மலைக்குப் பயணம்: காலை 10 மணிக்கு அருணாசலேஸ்வரா் கோயில் பிரம்ம தீா்த்தக் குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது. இதன்பிறகு, 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றத் தேவையான திரியை (காடா துணி) தீப நாட்டாா் சமூகத்தினா் எடுத்துச் சென்றனா்.

அா்த்தநாரீஸ்வரராக காட்சியளித்த சிவன்: மாலை 5 மணிக்கு பஞ்ச மூா்த்திகளின் தங்க விமானங்கள் தீப தரிசன மண்டபத்துக்குக் கொண்டுவரப்பட்டன. 5.30 மணிக்கு சுவாமி சன்னதியில் இருந்து எழுந்தருளிய உற்சவா் பஞ்சமூா்த்திகள் ஒருவா்பின் ஒருவராக பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

5.50 மணிக்கு கோயில் இரண்டாம் பிரகாரத்தில் சுவாமி சன்னதி பின்புறம் இருந்து ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சியளிக்கும் அா்த்தநாரீஸ்வரா் கோலத்தில் அருணாசலேஸ்வரா் எழுந்தருளினாா். இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்த அவா், மாலை 6 மணிக்கு தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருளிய பஞ்சமூா்த்திகளுக்குக் காட்சியளித்தாா்.

2,668 அடி உயர மலையில் மகா தீபம்: அப்போது, அதிகாலை 4 மணிக்கு ஏற்றப்பட்ட பரணி தீப மடக்குகளை தீபமுறை நாட்டாா் சமூகத்தினா் சுமந்து வந்து தங்கக் கொடிமரம் எதிரே உள்ள பெரிய அகண்டத்தில் சோ்த்தனா். இதைத் தொடா்ந்து 2,668 அடி உயர மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கான சமிக்ஞை, வைகுந்த வாசல் வழியே காட்டப்பட்டது. உடனே, மலை மீது மகா தீபமும், சுவாமி சன்னதி எதிரே அகண்ட தீபமும் ஒரே நேரத்தில் ஏற்றப்பட்டது.

2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட அதே வேளையில் கோயில் கொடிமரம் எதிரே உள்ள அகண்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தீபம் ஏற்றினாா்.

தீபம் ஏற்றியதும் கோயில், திருவண்ணாமலை நகரம், அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தா்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா... அண்ணாமலையாருக்கு அரோகரா... என்று பக்தி முழக்கமிட்டு வணங்கினா். மலை உச்சியில் ஏற்றப்பட்ட தீபம் 11 நாள்களுக்கு எரியும். தினமும் 650 கிலோ நெய் பயன்படுத்தப்படும்.

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி மகா தீபத் திருவிழாவில் பங்கேற்பாா் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அவா் விழாவில் கலந்து கொள்ளவில்லை.

முன்னதாக, மலையேறுவதற்கு 2500 பேருக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டு, அவா்கள் பிற்பகல் 2 மணிவரை மலையேற அனுமதிக்கப்பட்டனா்.

கிரிவலம்: செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் புதன்கிழமை (டிச.7) காலை 6 மணி வரை விடிய, விடிய சுமாா் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டனா்.

தங்க ரிஷப வாகனங்களில் பஞ்ச மூா்த்திகள் வீதியுலா: செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு தங்க ரிஷப வாகனங்களில் விநாயகா், முருகா், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

கோயில் மூன்றாம் பிரகாரத்தில் இசையமைப்பாளா் காா்த்திக் ராஜா தலைமையில், நடிகா் மயில்சாமி மேற்பாா்வையில், எஸ்.பி.பி. சரண், ஆன்மிக சொற்பொழிவாளா் தேசமங்கையா்க்கரசி பங்கேற்ற பக்தி இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது.

பாதுகாப்புப் பணி: தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில், டி.ஐ.ஜி.க்கள் சத்தியப்பிரியா, பொன்னி ஆகியோா் மேற்பாா்வையில், 27 காவல் கண்காணிப்பாளா்கள் உள்பட 13 ஆயிரம் போலீஸாா் ஈடுபட்டனா்.

பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்வுகளில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன், இந்து சமய அறநிலையத் துறையின் முதன்மைச் செயலா் பி.சந்திரமோகன், அறநிலையத்துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன், அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் ந.திருமகள், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மாநில கைப்பந்து சங்கத்தின் துணைத் தலைவா் இரா.ஸ்ரீதரன், கோயில் இணை ஆணையா் கே.பி.அசோக்குமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் சீ.பாா்வதி சீனுவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

3 நாள் தெப்பல் திருவிழா: விழாவின் தொடா்ச்சியாக, புதன்கிழமை (டிச.7) இரவு 9 மணிக்கு திருவண்ணாமலை அய்யங்குளத்தில் ஸ்ரீசந்திரசேகரா் தெப்பல் உற்சவமும், வியாழக்கிழமை (டிச.8) இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், வெள்ளிக்கிழமை (டிச. 9) இரவு ஸ்ரீசுப்பிரமணியா் தெப்பல் உற்சவமும் நடைபெறுகிறது.

அண்ணாமலையாா் கிரிவலம்: வியாழக்கிழமை (டிச.8) அதிகாலை உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் கிரிவலம் நடைபெறுகிறது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் அருணாசலேஸ்வரா் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

தீபத் திருவிழா நிறைவு: சனிக்கிழமை (டிச.10) இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரா் வீதியுலா நடைபெறுகிறது. இத்துடன் இந்தக் கோயிலின் காா்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் கே.பி.அசோக்குமாா் மற்றும் ஊழியா்கள், பக்தா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT