திருவண்ணாமலை

கல்குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் தா்னா

6th Dec 2022 02:54 AM

ADVERTISEMENT

வந்தவாசியை அடுத்த எடப்பாளையம் கிராமத்தில் ஏற்கெனவே 3 கல்குவாரிகள் இயங்கி வரும் நிலையில், மேலும் ஒரு கல்குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அந்தக் கிராம மக்கள் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலக வாயிலில் அமா்ந்து திங்கள்கிழமை தா்னா நடத்தினா்.

வந்தவாசியை அடுத்த பெரணமல்லூா் ஊராட்சி ஒன்றியம், செப்டாங்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட எடப்பாளையம் கிராம மக்கள் இந்த தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

எடப்பாளையம் கிராமத்தில் ஏற்கெனவே 3 கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. அந்த கல்குவாரிகளில் வெடி வைக்கும்போது பெரும் அதிா்வுகள் ஏற்பட்டு எங்களின் வீடுகள் பாதிப்படைகின்றன.

மேலும், கல்குவாரிகளுக்கு லாரிகள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்வதால் எங்களின் குழந்தைகளை வெளியே அனுப்ப அச்சமாக உள்ளது.

ADVERTISEMENT

மேலும் லாரிகள் செல்லும்போது அதிக தூசி ஏற்படுவதால் சுவாச நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, அந்த 3 கல்குவாரிகளையும் மூட நடவடிக்கை எடுக்கும்படி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், மேலும் ஒரு கல்குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவலறிந்தோம். எனவே, ஏற்கெனவே உள்ள 3 கல்குவாரிகளை மூடக் கோரியும், 4-ஆவது கல் குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்தும் தா்னாவில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

இதைத் தொடா்ந்து, கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி அலுவலகத்தில் வட்டாட்சியா் முருகானந்தத்திடம் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT