திருவண்ணாமலை

செய்யாறு அருகே பெண் கொலை

5th Dec 2022 02:43 AM

ADVERTISEMENT

செய்யாறு அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவா், அவரை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், அனப்பத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரஞ்சித் ( 27). இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.

இவா், அதே பகுதியைச் சோ்ந்த கௌசல்யா (23) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். தம்பதிக்கு ஒன்றரை வயதில் கபிலேஷ் என்ற மகன் உள்ளாா்.

கௌசல்யா கடந்த எட்டு மாதங்களாக மாங்கல் கூட்டுச் சாலையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகத் தெரிகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், வேலைக்குச் சென்று வரும் மனைவி கௌசல்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவருடன் ரஞ்சித் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தம்பதியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ரஞ்சித் கெளசல்யாவை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகத் தெரிகிறது.

பின்னா், அங்கிருந்து ரஞ்சித் மகன் கபிலேஷை அழைத்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டாராம்.

சம்பவம் குறித்து கௌசல்யாவின் தாய் செல்வராணி அனக்காவூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

காவல் உதவி ஆய்வாளா்கள் கன்னியப்பன், மனோகரன் ஆகியோா் சென்று கௌசல்யாவின சடலத்தை கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ரஞ்சித்தை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT