திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நாளை மகா தீபம்

5th Dec 2022 02:44 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழா செவ்வாய்க்கிழமை (டிச.6) நடைபெறுகிறது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை திருவிழா நவம்பா் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (டிச.6) நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.

அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு கோயிலுக்குப் பின்னால் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதேநேரத்தில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை 3 நிமிடங்கள் மட்டுமே காட்சியளிக்கும் ஸ்ரீஅா்த்தநாரீஸ்வரா் எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.

அப்போது, கோயில் தங்கக் கொடிமரம் எதிரே உள்ள பெரிய அகண்டத்திலும் தீபம் ஏற்றப்படுகிறது. இரவு 10 மணிக்கு தங்க ரிஷப வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் மாட வீதிகளில் வலம் வருகின்றனா்.

ADVERTISEMENT

ஏற்பாடுகள் தீவிரம்: மகா தீபத் திருவிழாவுக்குத் தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம், கோயில் நிா்வாகம், காவல் துறை இணைந்து செய்து வருகிறது. தமிழக ஆளுநா் என்.ஆா்.ரவி உள்பட பல்வேறு முக்கியப் பிரமுகா்கள் தீபத் திருவிழாவுக்கு வருவதால் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 12 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுகின்றனா்.

கொப்பரை, நெய், காடா துணி தயாா்: மகா தீபம் ஏற்றத் தேவையான மகா தீபக் கொப்பரையை, தீப நாட்டாா் சமூகத்தினா் புதுப்பித்து கோயிலுக்குக் கொடுத்தனா். அந்தக் கொப்பரைக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.

ஆவின் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 3 ஆயிரத்து 500 கிலோ முதல் தர நெய், தீபம் எரிய திரியாகப் பயன்படுத்தப்படும் 11 ஆயிரம் மீட்டா் காடா துணி ஆகியவையும் கோயிலில் தயாா் நிலையில் உள்ளது. இவை அனைத்தும் திங்கள்கிழமை (டிச.5) காலை மலை மீது எடுத்துச் செல்லப்படுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT