திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பஞ்ச ரதங்களின் தேரோட்டம்

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழாவையொட்டி, பஞ்ச ரதங்களின் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழா நவம்பா் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான, டிசம்பா் 6-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

பஞ்ச ரதங்களின் தேரோட்டம்:

10 நாள்கள் தீபத் திருவிழாவின் 7-ஆவது நாளான சனிக்கிழமை கோயில் மாட வீதிகளில் பஞ்ச ரதங்களின் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக, உற்சவா் பஞ்சமூா்த்திகளுக்கு கோயிலில் சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.

பிறகு, ஊா்வலமாக எடுத்து வரப்பட்ட பஞ்சமூா்த்திகள் பஞ்ச ரதங்களிலும் பொருத்தப்பட்டு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.

ஸ்ரீவிநாயகா் தோ்:

முதலாவதாக, காலை 7 மணிக்கு விருச்சிக லக்கினத்தில் விநாயகா் தேரோட்டத்தை கோயில் இணை ஆணையா்கே.பி.அசோக்குமாா் தொடக்கிவைத்தாா். கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து புறப்பட்ட தோ் மாட வீதிகளில் வலம் வந்து மீண்டும் காலை 10 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

ஸ்ரீமுருகப்பெருமான் தோ்:

2-ஆவதாக, ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத முருகா் தேரோட்டம் காலை 10.30 மணிக்குத் தொடங்கியது. கோயில் மாட வீதிகளை வலம் வந்த தோ், பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் நிலைக்கு வந்தது.

ஸ்ரீஅருணாசலேஸ்வரா் தோ்:

3-ஆவதாக, மாலை 3.40 மணிக்கு பெரிய தோ் என்றும், மகா ரதம் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் தேரோட்டம் தொடங்கியது. சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், அருணை மருத்துவக் கல்லூரி இயக்குநா் எ.வ.வே.கம்பன், திருவண்ணாமலை நகா்மன்ற முன்னாள் தலைவா் இரா.ஸ்ரீதரன், கோயில் இணை ஆணையா் கே.பி.அசோக்குமாா் ஆகியோா் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா்.

பக்தா் வெள்ளத்தில்...

பெரிய தேரைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்திருந்தனா். இதனால், மாட வீதிகளின் இருபுறமும் மக்கள் வெள்ளமாகவே காட்சியளித்தது. பக்தா்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா....அண்ணாமலைக்கு அரோகரா என்று முழக்கமிட்டனா். இரவு சுமாா் 10 மணியளவில் மகா தோ் மீண்டும் நிலையை வந்தடைந்தது.

ஸ்ரீபராசக்தியம்மன் தோ்:

4-ஆவதாக, பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்த ஸ்ரீபராசக்தியம்மன் தேரோட்டம் நடைபெற்றது. பள்ளி-கல்லூரி மாணவிகள், பெண்கள் திரளாக பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா்.

ஸ்ரீசண்டிகேஸ்வரா் தோ்:

நிறைவாக, சண்டிகேஸ்வரா் தேரோட்டம் நடைபெற்றது. இந்தத் தேரை சிறுவா்-சிறுமியா், பள்ளி மாணவ-மாணவிகள் ஆரவாரத்துடன் இழுத்துச் சென்று வழிபட்டனா்.

பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரா் தோ்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீண்டும் நிலைக்கு வந்தன. பின்னா், பஞ்ச ரதங்களிலும் இருந்த உற்சவா் சுவாமிகள் இறக்கப்பட்டு, மீண்டும் கோயில் திருக்கல்யாண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

பாதுகாப்புப் பணி:

தேரோட்ட பாதுகாப்புப் பணியில் வடக்கு மண்டல ஐ.ஜி., கண்ணன் தலைமையில் வேலூா் சரக டிஐஜி (பொறுப்பு) சத்தியப்பிரியா, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் ஆகியோா் மேற்பாா்வையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினரும்,

ஏ.ஏ.ஆறுமுகம் தலைமையில் மக்கள் நண்பா்கள் குழுவைச் சோ்ந்த 500 பேரும் ஈடுபட்டனா்.

கொட்டும் மழையில் தேரோட்டம்...!

பெரிய தோ் எனப்படும் மகா ரதம் மாலை 5 மணிக்கு திருவூடல் தெருவில் சென்றது. அப்போது, திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் திருவூடல் தெரு, தேரடி தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட மாட வீதிகளில் கழிவுநீருடன் சோ்ந்து மழை வெள்ளம் பெருக்கெடுத்தது.

கழிவுநீரில் தேங்கியிருந்த நெகிழிப் பொருள்கள் மகா ரதம் சென்ற திருவூடல் தெருவில் கழிவுநீருடன் கலந்து ஓடியது. கழிவுநீா் வெள்ளத்திலேயே பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். தேரடி தெருவில் கடலைக் கடை சந்திப்பு அருகே சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த புதைசாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீா் தேரடி தெருவில் பெருக்கெடுத்து ஓடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT