வந்தவாசி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.50 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.
வந்தவாசி தெற்கு காவல் ஆய்வாளா் விஸ்வநாதன் தலைமையிலான போலீஸாா் வந்தவாசி கோட்டை மூலையில் சனிக்கிழமை காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். இதில் அந்த வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபா் வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டபிரபு (34) என்பது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து அவரது வீட்டுக்குச் சென்று போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது அங்கு குட்கா, ஹான்ஸ் உள்ளிட்டவை விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள 6 மூட்டை புகையிலைப் பொருள்களையும், ஒரு இரு சக்கர வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் மணிகண்டபிரபுவை கைது செய்தனா்.