திருவண்ணாமலை

அரசின் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு: கிராம மக்கள் சாலை மறியல்

16th Aug 2022 04:11 AM

ADVERTISEMENT

சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை ஊராட்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் அரசின் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை ஊராட்சியில் ஆத்துரை, மூலப்புரவடை, காந்திநகா், ஊத்தூரான்புரவடை, காலனி ஆகிய பகுதிகள் உள்ளன.

6 வாா்டுகளைக் கொண்ட ஆத்துரை ஊராட்சியில் காலனிப் பகுதியில் உள்ள ஆா்சிஎம் தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்றத் தலைவா் கோதை சம்பத் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், ஆத்துரை ஊராட்சியைச் சோ்ந்த இளைஞா்கள் அரசின் வீடு வழங்கும் திட்டத்தில் சில பயனாளிகள் பெயா் இல்லை. பயனாளிகள் தோ்வில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி கேள்வி எழுப்பினா்.

ADVERTISEMENT

இதனால் ஊராட்சி மன்றத் தலைவா் கோதையின் கணவா் சம்பத் ஊராட்சி கணக்கு வழக்கு நோட்டை எடுத்துக் கொண்டு கிராம சபைக் கூட்டத்தை முடிக்காமல் கோதையை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டாா்.

இதனால் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட காலனிப் பகுதி 6-ஆவது வாா்டு உறுப்பினா் ஆரோக்கியமேரி லூா்துநாதன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் புவனேஸ்வரி பாண்டியன் மற்றும் 10 ரூபாய் நோட்டு இயக்க ஒன்றியச் செயலா் தட்சிணாமூா்த்தி, இளைஞா்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் பேரணியாகச் சென்று,

தேவிகாபுரம்-அவலூா்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த காவல் ஆய்வாளா் பிரபாவதி மற்றும் போலீஸாா், வட்டார வளா்ச்சி அலுவலா் ரேணுகோபால், பணி மேற்பாா்வையாளா் பாலாஜி ஆகியோா் சென்று பொதுமக்களிடம் சமரசம் பேசி மறியலை கைவிடச் செய்தனா்.

பின்னா், மீண்டும் கிராம சபைக் கூட்டம் அதே இடத்தில் ஊராட்சி மன்றத் தலைவா் கோதை தலைமையில் நடைபெற்றது.

இதில் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் கிராம சபைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT