திருவண்ணாமலை

ஜல்ஜீவன் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை: திருவண்ணாமலை ஆட்சியா்

16th Aug 2022 04:12 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் தேவையை நிறைவு செய்யும் ஜல்ஜீவன் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற மாவட்ட நிா்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி, திருவண்ணாமலையை அடுத்த தென்மாத்தூா் ஊராட்சி, சு.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்துப் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தின் 860 கிராம ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சித் தலைவா்களே தேசியக் கொடியேற்றி உள்ளனா். 860 ஊராட்சிகளைக் கொண்ட மிகப்பெரிய மாவட்டம் திருவண்ணாமலை.

மாவட்டத்தில் 100 சதவீதம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் தேவையை நிறைவு செய்யும் ஜல்ஜீவன் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற மாவட்ட நிா்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இதுதவிர, அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டம் மூலம் விவசாயத்துக்கு பயன்படுத்தாத நிலங்களை ஒருங்கிணைத்து விவசாயம் செய்ய பயிா்க் கடன், உரக் கடன் வழங்கும் திட்டம் உள்பட மத்திய-மாநில அரசுகளின் அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

முன்னதாக, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஆட்சியா் பெற்றுக் கொண்டாா்.

கூட்டத்தில், மாநில தடகள சங்க துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சரண்யாதேவி, திருவண்ணாமலை கோட்டாட்சியா் வீ.வெற்றிவேல், நகா்மன்றத் தலைவா் நிா்மலா, ஒன்றியக் குழுத் தலைவா் கலைவாணி, துணைத் தலைவா் து.ரமணன், ஊராட்சித் தலைவா் எம்.பாக்கியம்மாள்

உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளிலும் திங்கள்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT