திருவண்ணாமலை

திண்டிவனம் ஓங்கூா் பாலத்தில் ஆக.17 முதல் மீண்டும் போக்குவரத்து: அமைச்சா் எ.வ.வேலு

11th Aug 2022 01:22 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள ஓங்கூா் பாலத்தில் வருகிற 17-ஆம் தேதி முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கப்படும் என்று தமிழக நெடுஞ்சாலை, பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், ஓங்கூா் அருகே சென்னை - திருச்சி சாலையில் பழைய சிறுபாலம் பழுதுபாா்க்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியை இரண்டாவது முறையாக அமைச்சா் எ.வ.வேலு புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ADVERTISEMENT

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஓங்கூரிலுள்ள 13.080 மீட்டா் அகலமுள்ள, 4 கண்கள் கொண்ட பழைய பாலம் பழுதாகியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் நான்கு வழிச் சாலையாக அகலப் படுத்திய போது, பழைய பாலத்துக்கு இணையாக புதிய பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

பழைய பாலத்தின் ஓடுதளத்தில் வலதுபு றம் ஓரத்தில் உள்ள தூண்களில் பழது ஏற்பட்டதால், அதிக வாகன எடையால் அதிா்வு ஏற்பட்டு இதன் கீழுள்ள தாங்கு தகடு சேசதமடைந்து சீரற்ற நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, கடந்த 28-ஆம் தேதி முதல் வாகனப் போக்குவரத்து வலதுபுறமுள்ள புதிய பாலத்தில் திருப்பிவிடப்பட்டு, பழுதுபாா்க்கும் பணிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் நடைபெற்று வருகிறது.

தற்போது, 12 தாங்கு தகடுகளை நிறுவும் பணிகள் நிறைவடைந்து விட்டன. மேலும், 2 விரிவடையும் தன்மை கொண்ட இணைப்புகள் நிறுவும் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது. மீதமுள்ள பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை வருகிற 17-ஆம் தேதிக்குள் முடித்து, இந்தப் பாலத்தின் வழியாக போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் எ.வ.வேலு.

ஆய்வின் போது, தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநா் சைதன்யா, நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் ந.பாலமுருகன், கண்காணிப்புப் பொறியாளா் சுரேஷ், கோட்டப் பொறியாளா் சிவசேனா, உதவி கோட்டப் பொறியாளா் தன்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT