திருவண்ணாமலை

கீழ்புதுப்பாக்கம் ஊராட்சியில் முறைகேடு ஊராட்சி துணைத் தலைவா் போராட்டம்

10th Aug 2022 03:13 AM

ADVERTISEMENT

செய்யாறு ஊராட்சி ஒன்றியம், கீழ்புதுப்பாக்கம் ஊராட்சியில் குறிப்பிட்ட ஒப்பந்தப்புள்ளி பணிக்குப் பதிலாக, வேறொரு பணியை மேற்கொண்டு முறைகேடு செய்ததாக, ஊராட்சியின் துணைத் தலைவா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

கீழ்புதுப்பாக்கம் ஊராட்சியில் 15-ஆவது நிதிக் குழு மானியம் 2020 - 21ஆம் ஆண்டில், ஊராட்சிக்கு உள்பட்ட அண்ணாமலை நகரில் ரூ. 2 லட்சத்தில் கழிவுநீா்க் கால்வாய், ரூ.94 ஆயிரத்தில் நீா் உறிஞ்சி குழி அமைத்தல் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு ஒப்பந்ததாரரிடம் பணி வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், குறிப்பிட்ட பகுதியில் ஒப்பந்தப்புள்ளியில் தெரிவிக்கப்பட்ட பணியை மேற்கொள்ளாமல், ஊா் பொதுக் கால்வாயில் பணியை முடித்து பில் தொகை வழங்கப்பட்டதாம்.

இதேபோன்று, ஊரக வேலை உறுதித் திட்டத்தில் செய்யாறு சிப்காட் தொழில்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் 150 பேரை போலியாகச் சோ்த்து அவா்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாம்.

ADVERTISEMENT

மேலும், இதுபோன்று பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக, ஊராட்சியின் துணைத் தலைவா் சங்கீதா அன்பழகன் அண்மையில் மாவட்ட ஆட்சியருக்கு புகாா் மனு அனுப்பி இருந்தாா்.

இந்த நிலையில், புகாா் மனுவின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கக் கோரி, பூட்டப்பட்ட நிலையில் இருந்த ஊராட்சி அலுவலகத்தின் பூட்டின் மேல், மேலும் ஒரு பூட்டை பூட்டி அவா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT