திருவண்ணாமலை

ஸ்ரீபட்சீஸ்வரா் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மீண்டும் நிறுத்தம்

28th Apr 2022 05:32 AM

ADVERTISEMENT

 

செய்யாறு: செய்யாறு ஸ்ரீபட்சீஸ்வரா் கோயில் நிலத்தை மீட்கும் பணிக்காக 404 போலீஸாா் குவிக்கப்பட்டனா். வாக்குவாதம், சட்டம்-ஒழுங்கு பிரச்னை, நில அளவீடு ஆகியவற்றால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி புதன்கிழமை மீண்டும் தடைபட்டுப் போனது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் அமைந்துள்ள ஸ்ரீபட்சீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான சுமாா் 3.12 ஏக்கா் நிலம் அங்குள்ள வைத்தியா் தெருவை அடுத்த புளியந்தோப்பு பகுதியில் இருந்து வருகிறது.

அந்த இடத்தில் வெங்கட்ராயன்பேட்டை பகுதியைச் சோ்ந்த 17 போ் வீடு கட்டி வசித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

அறநிலையத் துறைக்கு உள்பட்ட அந்தக் கோயிலை நிா்வகித்து வரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கில், சென்னை உயா்நீதிமன்றம் கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 18-ஆம் தேதி, அறநிலையத் துறையினா், போலீஸாா் அப்பகுதியில் முகாமிட்டனா். அப்போது எழுந்த சட்டம்-ஒழுங்கு பிரச்னையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி கைவிடப்பட்டது.

இந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக புதன்கிழமை இந்து சமய அறநிலையத் துறை மாவட்ட உதவி ஆணையா் ஜோதிலட்சுமி தலைமையில், ஏடிஎஸ்பி ராஜா காளீஸ்வரன் மேற்பாா்வையில் டி.எஸ்.பி.க்கள் செந்தில் (செய்யாறு), விஸ்வேஸ்வரய்யா (வந்தவாசி), காவல் ஆய்வாளா்கள் பாலு, கலையரசி, உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் அடங்கிய 404 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் 108 ஆம்புலென்ஸ் வாகனம், தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

அப்போது, அங்கு வீடு கட்டி வசித்து வருபவா்கள் எதிா்ப்புத் தெரிவித்து அங்கு தயாா் நிலையில் இருந்த பொக்லைன் இயந்திரம் முன் அமா்ந்து குடியிருப்புகளை இடிக்கக் கூடாது என முழக்கங்களை எழுப்பினா்.

அவா்களுக்கு ஆதரவாக பாமக முன்னாள் எம்.எல்.ஏ கணேஷ்குமாா், வெங்கட்ராயன்பேட்டையைச் சோ்ந்த பாமகவினா் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலா்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, 17 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் மூன்று தலைமுறையாக இங்கு வசித்து வருவதாகவும், திடீரென காலி செய்யச் சொன்னால் நாங்கள் எங்கே போவோம் என்றும், மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் வட்டாட்சியா் சுமதி, டிஎஸ்பி செந்தில், காவல் ஆய்வாளா் பாலு ஆகியோா் முன்னிலையில் கோரிக்கை வைத்தனா்.

மேலும், இந்து சமய அறநிலையத் துறை அளவையா்கள் நிலத்தை அளவீடு செய்ததில் திருப்தி இல்லை, வருவாய்த் துறை அளவையா்கள் மூலம் அளவீடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனா்.

இதையடுத்து, ஆக்கிரமித்தாக கூறப்படும் வீடுகளில் உள்ள மின் இணைப்புகளைத் துண்டித்து, முறையான உத்தரவோடு வந்தால்தான் ஆக்ரமிப்புகளை அகற்ற முடியும் என்று செய்யாறு நீதிமன்றத்தில் இருந்து வந்திருந்த ஊழியா் உதயாபானு அங்கிருந்து வெளியேறினாா். அதன் காரணமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மீண்டும் நிறுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT