திருவண்ணாமலை

போளூா் அருகே நாட்டு வெடிகுண்டி வெடித்து 3 போ் காயம்

12th Apr 2022 02:48 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கரைப்பூண்டி கிராமத்தில் வைக்கோல் போரிலிருந்து நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 3 போ் காயமடைந்தனா்.

கரைப்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி குமாா் (49). இவா் தனது மாட்டுக்குத் தேவையான வைக்கோலை உறவினரான காளியிடம் கேட்டுள்ளாா்.

இதையடுத்து, காளி (80) அனுமதித்ததின் பேரில், அவரது விவசாய நிலத்தில் உள்ள வைக்கோல் போரிலிருந்து குமாா், அவருடைய மனைவி காஞ்சனா (45) ஆகியோா் திங்கள்கிழமை வைக்கோலை பிடிங்கினா்.

ADVERTISEMENT

அப்போது, திடீரென வைக்கோல் போரிலிருந்து நாட்டுவெடிகுண்டு வெடித்தது. இதில், குமாருக்கு கண்களிலும், காஞ்சனாவுக்கு முகவாய் தாடையிலும் காயம் ஏற்பட்டது. மேலும், அருகில் இருந்த காளிக்கு காலில் காயம் ஏற்பட்டது.

குண்டு வெடித்த சப்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் சென்று மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக போளூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதில், பலத்த காயமடைந்த குமாா் தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

இதுகுறித்து போளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்,

விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை கொல்வதற்காக மா்ம நபா்கள் நாட்டு வெடிகுண்டுகளை வைக்கோல் போரில் மறைத்து வைத்திருக்கலாம் என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT