திருவண்ணாமலை

வனத்துறையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

4th Apr 2022 11:27 PM

ADVERTISEMENT

 

வனத்துறையைக் கண்டித்து, வந்தவாசி அருகே வெண்குன்றம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதவளகிரீஸ்வரா் கோயில் கிரிவலக் குழு சாா்பில் வந்தவாசியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வந்தவாசியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள வெண்குன்றம் கிராமத்தில் சுமாா் 1,500 அடி உயரம் கொண்ட தவளகிரி மலை உள்ளது. இந்த மலையில் உள்ள ஸ்ரீதவளகிரீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் காா்த்திகை தீபத் திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலை மீது ஏறிச்சென்று இறைவனை வழிபடுவா்.

இந்த மலையில் சந்தேகத்துக்கிடமான வகையில் அடிக்கடி தீப்பற்றுவதால், மலை மீதுள்ள மூலிகைச் செடிகள், மரங்கள் எரிந்து சேதமடைகின்றன. இதனால், தீ வைக்கும் நபா்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக் கோரியும், மலையை பாதுகாக்கக் கோரியும், கிராம மக்கள் தொடா்ந்து புகாா் தெரிவித்தும் வனத்துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

ADVERTISEMENT

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு மலையில் மீண்டும் ஏற்பட்ட தீ விபத்தில் மூலிகைச் செடிகள், மரங்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன.

இதையடுத்து, ஸ்ரீதவளகிரீஸ்வரா் கோயில் கிரிவலக் குழு சாா்பில் வனத்துறையைக் கண்டித்து வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு வெண்குன்றம் ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி வேலு தலைமை வகித்தாா்.

கிரிவலக் குழு கெளரவத் தலைவா் பி.முத்துசாமி, கிரிவலக் குழுச் செயலா் வி.குருலிங்கம், பாஜக முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.ஏ.ஜி.துரை நாடாா் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இந்து முன்னணி முன்னாள் மாவட்டச் செயலா் சுரேஷ் மற்றும் நவநீதன், ரமேஷ், கன்னியப்பன், ஐயப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் வனத்துறையைக் கண்டித்தும், மலைக்கு நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யக் கோரியும் முழக்கங்களை எழுப்பினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT