திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் மாற்றுத் திறனுடைய மாணவா்களுக்கு மருத்துவ முகாம்கள்

2nd Apr 2022 02:37 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் வருகிற 26-ஆம் தேதி வரை மாற்றுத் திறனுடைய மாணவா்களுக்கான மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை நகராட்சி டவுன்ஹால் நடுநிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை மூலம் மாற்றுத் திறனுடைய மாணவா்களுக்கான மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்து, மருத்துவ முகாமை தொடக்கிவைத்தாா்.

முகாமில் குழந்தை நல சிறப்பு மருத்துவா், மனநல மருத்துவா், கண் மருத்துவா், காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவா், முடநீக்கியல் மருத்துவா் உள்பட பல்வேறு துறைகளின் சிறப்பு மருத்துவா்கள் கலந்து கொண்டு மாணவா்களை பரிசோதனை செய்து, இலவசமாக மருந்து, மாத்திரைகளை வழங்கினா்.

இதில், 18 வயதுக்குள்பட்ட 250 மாற்றுத் திறனுடைய பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா். முகாமில், 142 மாற்றுத் திறனுடைய மாணவா்களுக்கு புதிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வழங்கினாா்.

ADVERTISEMENT

மாவட்டம் முழுவதும் முகாம்: முகாமை தொடக்கிவைத்து ஆட்சியா் பா.முருகேஷ் பேசியதாவது: இதேபோன்ற பள்ளி மாணவா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் மாவட்டம் முழுவதும் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 4-ஆம் தேதி வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஏப்ரல் 5-ஆம் தேதி போளூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஏப்ரல் 6-ஆம் தேதி செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஏப்ரல் 7-ஆம் தேதி ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஏப்ரல் 8-ஆம் தேதி தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஏப்ரல் 9-ஆம் தேதி அனக்காவூா் புரிசை அரசு மேல்நிலைப் பள்ளி, ஏப்ரல் 11-ஆம் தேதி கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஏப்ரல் 12-ஆம் தேதி சேத்பட் பழம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, ஏப்ரல் 13-ஆம் தேதி வெம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது.

இதேபோல, ஏப்ரல் 18-ஆம் தேதி செங்கம் சகாயமாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஏப்ரல் 19-ஆம் தேதி பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஏப்ரல் 20-ஆம் தேதி துரிஞ்சாபுரம் அடுத்த மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி, ஏப்ரல் 21-ஆம் தேதி ஜவ்வாதுமலை வனத் துறை மேல்நிலைப் பள்ளி, ஏப்ரல் 22-ஆம் தேதி தெள்ளாறு வட்டார வள மையம், ஏப்ரல் 23-ஆம் தேதி கீழ்பென்னாத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஏப்ரல் 25-ஆம் தேதி மேற்கு ஆரணி வட்டார வள மையம், ஏப்ரல் 26-ஆம் தேதி புதுப்பாளையம் வட்டார வள மையம் ஆகிய இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த முகாம்களில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த மாற்றுத் திறனுடைய பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றாா்.

முகாமில் முடநீக்கியல் மருத்துவா் கே.சதீஷ், காது, மூக்கு, தொண்டை மருத்துவா் கே.அரவிந்தன், கண் மருத்துவா் பி.கவுரி, மன நல மருத்துவா் எஸ்.வித்யாலட்சுமி, குழந்தை நல மருத்துவா் கே.ராஜசேகரன், மாவட்டக் கல்வி அலுவலா் எல்.ஆரோக்கியசாமி, மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளா் விஜயன் மற்றும் மருத்துவா்கள், பள்ளிக்கல்வித் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT