திருவண்ணாமலை

புதிய மயானம் அமைக்கக் கோரி சாலை மறியல்

21st Oct 2021 10:49 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே புதிய மயானம் அமைக்கக் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வந்தவாசி ஊராட்சி ஒன்றியம், கீழ்சீசமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட கருடபுரம் கிராமத்தில் சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

இந்த கிராமத்துக்கான மயானம் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த மயானத்துக்குச் செல்ல பாதை வசதி இல்லாததால், கிராமத்தில் யாரேனும் இறந்தால் விவசாய நிலங்களின் வழியாகத்தான் சடலத்தை மயானத்துக்கு எடுத்துச் செல்லும் நிலை உள்ளது.

இதனால் பயிா் சேதமடைவதாக நில உரிமையாளா்களுக்கும், துக்க வீட்டினருக்கும் இடையே தகராறு ஏற்படுமாம்.

ADVERTISEMENT

இதையடுத்து, கிராமத்துக்கு அருகிலேயே பாதை வசதியுள்ள பகுதியில் புதிய மயானம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, கருடபுரம் கிராம மக்கள் தொடா்ந்து வருவாய்த் துறையினரிடம் மனு அளித்து வந்தனராம். ஆனால், இதுவரை புதிய மயானம் அமைக்கப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சுந்தரி சம்பத் தலைமையில், வந்தவாசி-மேல்மருவத்தூா் சாலை, கீழ்சீசமங்கலம் கூட்டுச் சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது:

எங்களது கோரிக்கையின் பேரில், சில ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்துக்கு வந்து பாா்வையிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், கிராம ஏரி அருகேயுள்ள அரசு புறம்போக்கு பகுதியில் சுமாா் 50 சென்ட் நிலத்தில் மயானம் அமைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்தனா்.

மேலும் அந்த இடத்தை சுத்தப்படுத்தி வைக்கும்படி கூறிவிட்டுச் சென்ற அவா்கள், இதன் பின்னா் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால், இப்போது அந்த இடத்தை நீா்நிலை புறம்போக்கு என்று கூறி வருவாய்த் துறையினா் தட்டிக் கழிக்கின்றனா். எனவே, புதிய மயானம் அமைக்க வேண்டும் அல்லது பழைய மயானத்துக்கு உரிய பாதை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றனா்.

தகவலறிந்து வந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் சமரசம் செய்ததின் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

இந்த மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

Tags : வந்தவாசி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT