திருவண்ணாமலை

ஆற்று தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் கிராம மக்கள் அவதி

28th Nov 2021 10:23 PM

ADVERTISEMENT

வந்தவாசி அருகே சுக நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், கொவளை கிராமப் பகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதனால், கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தொடா் பலத்த மழை காரணமாக, வந்தவாசி வட்டாரத்தில் உள்ள பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பின. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீா் கரைபுரண்டு ஓடுகிறது.

வந்தவாசியை அடுத்த கொவளை கிராமப் பகுதியில் செல்லும் சுக நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப் பாலத்தை மூழ்கடித்து தண்ணீா் செல்கிறது.

இந்த நிலையில், கொவளை கிராமத்தைச் சோ்ந்த கன்னியப்பன் மனைவி மீனாட்சி(75) என்பவா் உடல்நலக் குறைவால் சனிக்கிழமை இறந்தாா்.

ADVERTISEMENT

இதையடுத்து அவரது இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிராமப் பகுதியில் செல்லும் சுக நதியில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால், அரை கி.மீ. தொலைவில் உள்ள மயானத்துக்கு உடலை அடக்கம் செய்ய எடுத்துச் செல்லமுடியவில்லை. மாறாக 20 கி.மீ. சுற்றிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால், ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டு மீனாட்சியின் உடல் அதில் ஏற்றப்பட்டு மயானத்துக்கு புறப்பட்டது, உறவினா்கள் சிறிய சரக்கு வாகனங்களில் பின்தொடா்ந்தனா்.

கீழ்ப்பாக்கம், கீழ்க்கொடுங்காலூா், உளுந்தை, எல்.எண்டத்தூா், கிளியாநகா், ஆலப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக 20 கி.மீ. சுற்றிச் சென்று உடல் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

தரைப் பாலத்தின் மீது மேம்பாலம் கட்டுவதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு பல மாதங்களாகின்றன. ஆனால், மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை என கிராம மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT