திருவண்ணாமலை

ஏரி உபரிநீரால் சாலை துண்டிப்பு: பொதுமக்கள் அவதி

23rd Nov 2021 02:02 AM

ADVERTISEMENT

சேத்துப்பட்டை அடுத்த மட்டபிறையூா் ஊராட்சியில் ஏரி உபரிநீரால் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த மட்டபிறையூா் ஊராட்சியில் சுமாா் 130 ஏக்கரில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி கடந்த 20 நாள்களுக்கு முன்பு முழுக் கொள்ளளவை எட்டி கோடி விழுந்தது.

இந்தக் கோடியின் உபரிநீா் மட்டபிறையூா் ஊராட்சியில் இருந்து அல்லியாளமங்கலம், செம்மியமங்கலம், பெரணம்பாக்கம், ராந்தம், பாடகம் என பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் சாலையில் வெளியேறுகிறது. இதனால் சாலையில் அரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைபட்டுள்ளது.

ஆபத்தை உணராமல்...

ADVERTISEMENT

அரிப்பு ஏற்பட்டுள்ள சாலையில் ஆபத்தை உணராமல் விவசாயிகள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்கின்றனா். வாகன ஓட்டிகளும் இந்தப் பள்ளத்தின் வழியே செல்லுகின்றனா். இதனால் கால்நடைகளும், வாகன ஓட்டிகளும் தவறி விழ வாய்ப்புள்ளது.

விபத்து ஏற்படுவதற்கு முன்னா் சம்பந்தபட்ட அலுவலா்கள் சாலையின் குறுக்கே சிமென்ட் குழாய் அமைத்து உபரிநீரை வெளியேற்றவும், உபரி நீரால் சாலை பழுதடைந்ததை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள்

கோரிக்கை வைக்கின்றனா்.

மேலும் அல்லியாளமங்கலம், செம்மியமங்கலம், பெரணம்பாக்கம், ராந்தம் என பல்வேறு கிராமங்களுக்குச் செல்ல 5 கி.மீ. தொலைவுக்கு சுற்றிச் செல்லவேண்டியுள்ளது.

எனவே, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள்

எதிா்பாா்க்கின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT